பக்கம்:இலக்கியச் சாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. தாயுமானவர் சினம்

ஆழ்வார் நாயன்மார்கட்குப்பின் தோன்றிய சமயப் பெரியோர்களை நினைக்கும்போது, பட்டினத்தார் தாயுமானவர் இராமலிங்க வள்ளலார் என்ற மூவர்நினைவு நமக்கு இயல்பாக வருகின்றது. பட்டினத்தார் கடுந்துறவு என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தவர். தாயுமானவர் பொதுநெறி என்ற இயக்கத்துக்கு வித்திட்டவர். வள்ளலார் சமயத்திடை உயிர்த் தொண்டு என்னும் இயக்கத்தைக் கலந்தவர். இம் மூவர்தம் பாடல்களில் படிமுறை வளர்ச்சியைக் காண்கின்றோம். பட்டினத்தடிகளின் பாடலில் துறவுவேகம் உண்டு; தாயுமானவர் பாடலில் துறவியின் அமைதியுண்டு; இராமலிங்கர் பாடலில் துறவு நலம் உண்டு. இக்கட்டுரைக்கண் தாயுமானவரின் உள்ளுணர்ச்சிகளில் ஒர் உணர்ச்சியை விளங்கிக் கொள்வோம்.

தாயுமானவர் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்தவர். முறையாகத் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தி ஓர் ஆண்மகவுக்குத் தந்தையானவர். மனைவி இறந்தபின் அக்குழந்தைக்குத் தாயும் ஆனவர். சாரமாமுனிவர் மடத்தைச் சார்ந்த மெளனகுரு தேசிகரை அருட்குருவாகக் கொண்டவர். இவர்க்குத் தமிழ் மொழிபோல் வடமொழி அறிவும் நிரம்ப உண்டு என்பதனை இவர் செய்யுட்கள் காட்டுகின்றன.வடமொழிக்கலப்புமிகுதியிருப்பினும் பாடல் நடைவானப்பறவையின்பறப்புப்போல் உயர்ந்துசெல்கின்றது. வட சொற்குறைந்த செய்யுட்களும் பல இல்லாமல் இல்லை. 'மொழிக்கு மொழி தித்திப்பாக மூவர் சொலும் தமிழ்’ என்ற இடத்துத் தமிழ் என்னும் சொல் இனிமைப் பொருள் உடையது என்பதனைக் கரும்போடு உவமித்துக் காட்டியுள்ளார். , ,