பக்கம்:இலக்கியச் சாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வ.சுப. மாணிக்கனார்



ஒன்றுக்குப்பின் இப்போது வேண்டாம்; இரண்டுக்குப்பின் எப்போதும் வேண்டாம் என்று எவ்வள்வு புது முழக்கங்கள். அத்தகைய பறைப்பும் முழக்கமும் நூலுக்கும் வேண்டும். வீட்டுக்கு ஒரு நூலகம்; புத்தகம் வாங்கிப் புத்தகம் பெறுக; ஏடுகள் வாங்கின் கேடுகள் நீங்கும்; இத்தகைய பறையரவம் இருந்தால், வீட்டு நூலகங்கள் பெருகும்.

வாசகர்களே நம் வாடிக்கையாளர்கள். ஐயாயிரம் படிகளாவது முதல் முறையில் விற்றால் எழுத்தாளர் வளம் தோன்றும். உலகத் தமிழர் தொகைக்கு இது பெரிய எண்ணிக்கையன்று. மக்களை வளர்த்தே எழுத்துச் சான்றோர்கள் வளப்படவேண்டும்; என்றாலும் அரசுக்கும் இதில் செம்பாகம் பொறுப்பு உண்டு. கதர் கைத்தறி முதலானவற்றிற்குச் சிறப்புத் தள்ளுபடி வழங்குவது போலத் தரமிக்க நூல்கட்கும் சிறப்புத் தள்ளுபடியை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். நிதிநிலையில் ஐந்து விழுக்காடாவது புத்தகவுலகிற்கு ஒதுக்கீடு செய்வது நல்லது. இது மையவரசுக்கும் பொருந்தும். அப்போதுதான், பாரதியார் கனவின்படி, வெள்ளம்போற் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் உயரும். அறியாமைப் பள்ளத்தில் விழுந்திருக்கும் உயர்திணைக் குருடரெல்லாம் அறிவு விழிபெற்று வாழ்வுப் பதவி பெறுவர்.

இந்தியாவிலும் தமிழகத்திலும் பதிப்பு வெளியீடுகள் தனியார் பக்கமாகவே உள.சிறுசிறு தொழிற்சாலையளவுக்குக் கூட இப்பதிப்பாளர்தம் உழைப்புக்கு ஊதியமில்லை. பாடநூல்களைத் தவிர்த்தால் தமிழகத்தில் ஒராண்டுக்கு மூன்று கோடிக்கு மேல் விற்பனைக்குறி இராது. ஆண்டுக்கு நூறு கோடியாவது புத்தக விற்பனை நிகழ்ந்தால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிவு சார்ந்த வளர்ச்சியாக ஒங்கும். விடுதலைப் பலிஞர்கள் போல எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் எவ்வளவு காலம் மொழிப்பலியர்களாக இருக்க முடியும்!

நிலம் முதலான சொத்துடைமைகள் உடையான் இறந்த ஐம்பதாண்டுகட்குப்பின் சட்டபடி பொதுவுடைமை யாவதில்லை. 'தாயத்தின் அடையா வீயச் செல்லா வீற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/16&oldid=509736" இலிருந்து மீள்விக்கப்பட்டது