பக்கம்:இலக்கியச் சாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

வ.சுப. மாணிக்கனார்



சிகரவரை மீதெழுந்த குன்றைவடி

வேலவன்தாள் சென்னி வைப்பாம் என்று நூன்முக வாழ்த்தில் முருக வணக்கத்திற்கு முன்பே திருக்குறட் கடவுள் வாழ்த்தைப் போற்றுவது நினையத்தகும். 'தமிழை நம்பி உரையிருக்கும்’ எனவும் பன்னு தமிழோங்கு திருக்கோட்டி எனவும் 'மதுரைப் பொய்கைக்கு நாயகம் சங்கப் புலவர் எனவும் வருவதனால் பாடுவாரின் தமிழ்ப்பற்று விளங்கும். பாரதம், இராமாயணம், புராணம், திருக்குறள், பிற நீதிநூல்கள், சிற்றியலக்கியங்களில் இவருக்கு நல்ல பயிற்சியோடு கூரிய பார்வையும் இருந்தது. மருவிய இடைக்காலத்துப் பல புலவரிடம் காணவியலாத வரலாற்றுச் சிந்தனைகள் பாடுவாரிடம் நன்கு இருந்தன. நடுவாற்று மருதம் பிள்ளையார் விருத்தத்தில் கும்பினித்துரை, மருதுபாண்டியர், முத்துவிசயரகுநாத சேதுபதி முதலியோர் குறிப்புக்கள் வருகின்றன. திருமுகவிலாசம் நகரத்தார் வரலாற்றுச் சான்றுடைய அரிய நூலாகும்.

பாடுவார் முத்தப்பர் படைப்புக்களிற் சிறந்தவை திருமுகவிலாசமும் செயங்கொண்டான் வழக்கமும் ஆகும். திருமுகவிலாசம் கலிவெண்பாவால் ஆனது; ஏறக்குறைய 260 கண்ணிகள் நீண்டது. முருகக்கடவுள் ஊனை நகர் வீரபண்டாரத்தின் மகன் சுப்பிரமணியத்துக்காக இளைசை ஏழுநகரத்தார்க்கு எழுதிக்கொடுத்த பாவனையில் பாடுவார் முத்தப்பர் தீட்டிய திருமுகம் இது.

என்பாலுன் பாட்டை யியம்பினாய் வன்புலவர் உன்பாலென் பாட்டை யுரைக்கக்கேள்

என்று தன் தந்தை சிவனின் இழிநிலை, தாய் உமையின்

பலநிலை, அண்ணன் கணபதியின் அழுகுநிலை, மாமன் மாலின் திருவிளையாடல்கள், தன் தாழ்நிலை இவற்றை யெல்லாம் முருகனே சொன்னதாக அங்கதம்படவும் கிண்டலாகவும் கதைசெறியவும் பாடுவார் முத்தப்பர் உட்குறிப்பாகப் பாடியிருக்கின்றார்.