பக்கம்:இலக்கியச் சாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

வ.சுப. மாணிக்கனார்



குறவள்ளிவெயிலில் நின்று வருந்தும்துன்பம் பொறாமல் முருகப்பெருமான் அவளுக்கு நிழல் கொடுக்க மரமாய் நின்றாராம். காதல் வெயிலிற்பட்ட முருகன் இவ்வாறு சூழ்ச்சி செய்தார் என்று சொல்ல அன்புப் புலவருக்கு மனம் வருமா? 'பெண்ணென்றால் பேயும் இரங்கும்’ என்பது உலகச்சொல். தெய்வ முருகன் இரங்குதற்குச் சொல்ல வேண்டுமா? என்பது முத்தப்பர் கருத்து.

'இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்பது உலகப்பெருவழக்கு. இதற்குப் புது விளக்கம் செய்கின்றார் முத்தப்பர். குறள் வடிவு கொண்ட திருமால் மாவலியரசனிடம் மூன்றடிமண் இரந்தார்; அரசகுருவாகிய சுக்கிர பகவான் கொடாதே என்று தடுத்ததனால் ஒரு கண் கெட்டுவிட்டது. மாவலி கொடுத்தால் என்ன, கொடாவிட்டால் என்ன என்று சுக்கிரர் குறுக்கே நில்லாதிருந்தால், கண்கெட்டிருக்குமா? என்று கேட்கின்றார் பாடுவார். ஒதுங்கிப் பிழைக்கத் தெரியவில்லையே என்றும் குறிப்பிடுகின்றார்.

கூச்சமற மாவலி பூமியைக் கொடுக்க

மால்வாங்கக் குறுக்கே சுக்கிரன் பேச்சறி யாமல் பேசிக் கண்ணிழப்பா

னேனொதுங்கிப் பிழைக்கொண்ணாதோ என்பது பாடுவார் கருத்துரை. இவ்வாறு முன்னைக் கதை நிகழ்ச்சிகளை ஆழமாக ஊடுருவிப் பார்த்துப் புதுத் தடங்கள் கண்ட புலமைப் பெருமையுடையவர் பாடுவார். முத்தப்பர் பாடுவார் மட்டும் அல்லர் கதைகளின் நுட்பங்களை நாடுவார் என்று கண்டு போற்றுகின்றோம். -