பக்கம்:இலக்கியச் சாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியச் சாறு

17



தீட்டிக் கொண்டிருக்கும்போது, அவள் கண்பெற்று அந்த ஒவியங்களைச் சிதைத்தாள் என்ற மனநிலை காட்டப்படுகின்றது. நிருவான ஒவியத் தீட்டுக்கெனப் பெண்கள் பொருளாவதைப் பல புதினங்கள் உத்தி மரபாகக் கொண்டுள.இவையெல்லாம்நடப்பியலா? எழுத்தாளர்கள்தம் கேட்பியலா? கற்பனையா?

காப்பியத்துக்கும் புதினத்துக்கும் சில வேற்றுமையை விளக்கும் திறனி கைலாசபதி 'யாராவது முகத்திற்கு நேரே சொன்னால் வெட்கம் பிய்த்துக் கொண்டு வருஞ் செய்தியை நாவலில் மெய்ம் மறந்து ஆழ்ந்து வாசிக்க முடிகிறது' என்று பொருட்கவர்ச்சி மாயைகளைப் புதினவெற்றியாகச் சாதிப்பர்.

புதின முதலியவற்றிற்குப் பழி சுமத்தும் கரைகடந்த காமப் புனைவுகள் முன்பும் இல்லாமல் இல்லை. குத்து விளக்கெரிய’ எனத் தொடங்கும் திருப்பாவையும் திருவாசக நீத்தல் விண்ணப்பத்தின் சில பாடல்களும் திருப்புகழும் விறலிவிடு துரதும் இப்போக்கின. சீவகசிந்தாமணிப் பெருங்காப்பியம் நரிவிருத்தம் பாடிய சமணத் துறவியால் எழுதப் பட்டிருப்பினும், சில பாடல்கள் வகுப்பில் ந்டத்தும் மாண்பினவல்ல. அண்ணாவின் கம்பரசத்தின்படி, கம்பரும் இதற்கு விலக்கல்லர்.

கிரேக்க இலக்கியங்கள் நாண்வர்ம்பு அறியாதவை.இன்று ஞாலமுழுவதும் அஞ்சப்படும் (எயிட்சு) முரண்பால் நோய்க்கு மூலங்களைக் கிரேக்கத்திற் காணலாம். கிரேக்க நாகரிகத்தில் திறந்த உடல் வனப்புக்கே அழகு மதிப்புண்டு. உரோமவத்திக்கன் கலைக் கூடத்தில் அற்றம் மறையா ஆணுருவங்கள் ஏராளமாக உள. உலக மக்கள் திரளாக வந்து காணும் பொருட்காட்சியில் புல்லிய அம்மணங்கள் இக்காலத்துக்குப் பொருந்தா என்றுணர்ந்த போப்பாண்டவர் அற்றம் மறைக்க ஆணையிட்டார். நம்நாட்டுக் கோயில்களிலும் இக்காட்சிகள் உள்ளன. சுசீந்திரக் கோயிற் சிற்பங்கள் மறை வற்றவை. சென்னை மாநகராட்சி மாளிகையில் தியாகராசர் உருவச் சிலைக் கீழ் இரு பெண்ணுருவங்கள் கிரேக்கமாக வடிக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/19&oldid=509739" இலிருந்து மீள்விக்கப்பட்டது