பக்கம்:இலக்கியச் சாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வ.சுப. மாணிக்கனார்



ஆதலின் பச்சைத் தோற்றம் நீண்ட வரலாறுடையது என்பது பெறப்படும். இருப்பினும் அப்போக்கு நாணக் கரைகடத்தலாகாது.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியரும் சங்கச் சான்றோர்களும் திருவள்ளுவரும் காதல் நிலைகளை இரு பாலாரும் ஒன்றியிருந்து கற்கத் தக்க நாண்வேலிப் பொருளாகப் பாடியிருக்கும் தமிழ்மரபைத் தமிழ் எழுத்தாளுநர் உளங்கொள்ள வேண்டும். ஞாலத்திற்கும் பைஞ்ஞலத்திற்கும் வழி காட்டத்தக்க காதலியம் தமிழினத்துத்கு உண்டு. அதுதான் காதல் பாடும் தூய வரம்பு; பெண்ணினத்தைத் தலைவியாக மதித்துப் போற்றும் உயர்நெறி; ‘ஒருவர் பொறை இருவர் நட்பு என்றபடி, திரிந்தோடும் மனத்தைத் திருத்தி நிறுத்தும் சால்பு.

எழுது பொருட்களங்கள்

எழுத்து வல்லுநர்க்கு இக்காலம் பக்குவமான உரிமைக் காலம். குழுமச் சீர்திருத்தமாக எப்பொருளையும் எப்படியும் எழுதலாம்; திரைக்காட்சிக்குக்கூட ஒப்பாளர் குழுவுண்டு. பண்டு எழுத்தாளர்க்கு அரங்கேற்றங்கள் இருந்தன. இன்றோ எழுத்தாளிகட்கு வரம்பற்ற விடுதலை. ஆதலின் பொறுப்பு உணரவேண்டும். பெண்களும் எழுத்தாளர்களாக முன் வரும் நற்காலம் இது. கைம்மை மனம், மறுமணம், சாதிக்கலப்புமணம், மதக்கலப்பு மணம், ஏழை செல்வக்கலப்பு மணம், அயலக மணம், மணவிலக்கு, வரன் காணிக்கை, கைம்மைத் தமக்கை தங்கையின் கொடுமை, பெற்றோர் பகை, அலுவலகவுறவுகள், பால்வினை முரண்கள் என எதனை எழுதினாலும் படங்களோடு படிக்க மன்னாயங்கள் பக்குவமாயிருக்கும் காலம் இது. இன்றைய பொருட் செய்திகளை முன்னை இலக்கியங்கள் தொட்டதில்லை.இவை பல அக்காலத்து இல்லை என்பது கருத்தன்று.செய்யுளமைப்பு அவ்வளவு எளிதாக இடங்கொடாது. மேலும் இவற்றைப் பாடற்பொருளாகக் கருதும் நெகிழ்மரபு தோன்றவில்லை. ஆதலின் ஒரு நூற்றாண்டான உரைநடை வளர்ச்சியில், பல்வேறு பொருட் செய்திகள் நுழைந்து கொண்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/20&oldid=509740" இலிருந்து மீள்விக்கப்பட்டது