பக்கம்:இலக்கியச் சாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியச் சாறு

19



வேதநாயகர், இராசமையர், மாதவையா முதலியோரின் தொடக்கப் புதினங்களிலே நடப்புக் குடும்பச் சிக்கல்கள் பொருளாகிவிட்டன; ஆங்கிலக்கல்வியும்விடுதலையியக்கமும் காந்தீயமும் அயலக அரசியற் கொள்கைகளும் தொழிற் புரட்சிகளும் உரிமை வேட்கைகளும், தீண்டாமை, மதுவிலக்கு, சாதியொழிப்பு, பெண்ணுரிமை, நிலவுடைமை முதலாயினவும் எழுத்தாளர்கட்கு வரம்பிலாப் பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. பொருள் வரம்பு கட்ட முடியாத காலப்போக்கு இது.

குடும்பக் களங்கள்

எத்துணைப் பொருட்கள் பல்கி மல்கிவரினும் இலக்கியத்திற்கு முதன்மையான பொருட்கள் குடும்பவுறவு, ஆண் பெண் பாலுறவு. வரலாற்றுப் புதினமாயினும் குடும்பவுறுப்பினர்கள் பாத்திரங்களாக வருவர். இலக்கியவுலகம் என்பது இல்லறவுலகம்; காதல், பாலுணர்ச்சி, தன்மானம், தன்னுரிமை, அவா இவையெல்லாம் இயக்கவுணர்வுகள். நான் சுட்டும் அகவியம் புருடியம் அன்று. இணைவிழைச்சு என்பது பிறப்பின் தலையான முடிவான நோக்கமில்லை.துறவு என்ற ஒருநிலை உலகம் முழுதும் உண்டு. பாலுணர்வு வற்றிய முதுமை நிலைகளும் உண்டு. குடும்பக்களமே இலக்கியக் களம் ஆதலின், மனித மன்பதையின் அனைத்து வினைகளும் குடும்பக் கரைகளில் மோதுகின்றன. இங்கே எழுத்தாளனுக்குத் தற்பொறுப்பு உண்டு. கலை கலைக்காகவே என்று வைத்துக் கொண்டாலும் நம் எழுத்தால் ஒருவன் திருந்தினான் என்பதுகேள்விப்பட்டால்; எழுதிய ஞான்றினும் மகிழ்வோம். அல்லவா?

'சோதிடத்தில் உண்மையுண்டா என்பதல்ல கேள்வி. உண்மையாக இருக்கலாம், பொய்யாக இருக்கலாம். இரண்டும் கலந்ததாகவும் இருக்கலாம். அதில் பாபவினைக்கு நிறைய இடம் உண்டு என்பதே நமக்குப் போதும். இந்த விஷயத்தை விளக்குவதற்காகவே கதை எழுதப்பட்டது. வெறும் பொழுது போக்குக்கு எழுதவில்லை. பொழுது தானாகவே போகும்.அதை யாரும்போக்கவேண்டியதில்லை.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/21&oldid=509741" இலிருந்து மீள்விக்கப்பட்டது