பக்கம்:இலக்கியச் சாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வ.சுப. மாணிக்கனார்



கணவனை ஐயப்படுவதில்லை. ஐயப்பட்டாலும் மனைவி பொறுப்பதைத் தவிர வழியில்லை. இந்நாட்டில் திருமணஞ் செய்துகொள்ளப்புகும் நடிகையர்கள் கூடத்திருமணத்துக்குப் பின் நடிப்பது என் கணவரின் இசைவைப் பொறுத்தது என்று சொல்வதுதான் நம் பெண்ணினப் பெருமை. இவ்வாறு நடிகர்கள் சொல்வார்களா? இத்தமிழ் நாகரிகத்தை இந்திய நாகரிகத்தை எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டும். மன்குல நன்மைக்காகவும் பெண்குல மேன்மைக்காகவும் பெண்மேல் ஐயப்பாடு என்ற பொருளை எழுத்துலகிலிருந்து ஒழித்துக் கொள்ள முடிந்தால் நல்லது. இன்றேல் குறைத்துக் கொள்ளவாவது வேண்டும். இக்கால ஆண் பெண் பணி நெருக்கத்தை விளையாட்டு வினைப்பொருளாக மேற்கொள்ளாமை பெண்ணினத்துக்கே காட்டும் பெருமதிப்பு.

மனமாற்றம் எனும் உத்தி

தீய உளவியல்களையே பறையறைந்து கொண்டிராமல் தீமை தீர்க்கும் நல்ல மனமாற்றங்களைச் சுவை படச்சொல்லும் திறத்தை எழுத்தாளர்கள் வளர்த்துக் கொள்வார்களாக, பெண் குழந்தைகள் பிறப்பதைப் பெண்ணினமே விரும்பவில்லை. ஆண் குழந்தைகள் அடுத்தடுத்துப் பிறந்தாலும் மக்கள் மன்பதை மகிழ்ச்சி மீதூர்கின்றது. பெண்கருவெனத் தெரிந்தால் கருவை அழிக்கலாமா ஆணாகத் திரிக்கலாமா என்று தீய அறிவியல் துணை செய்வதைக் கற்கின்றோம். தாய்மையுணர்ச்சியை மக்கள் வெல்லும் நாள் வருவதாயின் மக்களினத்திற்கே அழிவு நெருங்குவதாகும் என்பர் பெற்ற மனத்தின் புதினர் மு.வ. நான் மருமகளாக வந்தபோது என் மாமியாரால் பட்ட துன்பம் நான் மாமியாராகும் போது என் மருமகள் படுவாளாக என்ற நெருங்கதையைத்தான் பாரத நாகரிகமாகக் காண்கின்றோம். பெண்கட்குச் சொத்துடைமை கொடுத்தாற்கூட வரன் விலைக் கொடுமை மாறிவிடும் என்று கருத முடியவில்லை. ஐயத்தாலும் வரன் விலைக் கொடுமையாலும் நகரங்களில் தற்கொலைகள் கூடுதலாகக் காண்கின்றோம்.இதற்கு என் போல்வார் கருதும் ஒரு காரணம் நம் எழுத்துப் படைப்புகளின் முடிவுப் பிழையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/24&oldid=982849" இலிருந்து மீள்விக்கப்பட்டது