பக்கம்:இலக்கியச் சாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

வ.சுப. மாணிக்கனார்



நோக்கியே எழுதப்படுவன; சிலபெரு நகரங்களையும் சில தெருக்களையும் எண்ணியே எழுதப்படுவன. சிலவகை அயல்மேல் நாகரிகத்தினரை மனத்துட் கொண்டே எழுதப்படுவன. ஆதலின் ஆங்கில வுரையாடல்கள் அவ்வெழுத்திலே இருப்பது அவ்வாசகர்கட்கு இன்னும் எளிதாய் புரியுமே, தமிழ் நூல் என்ற மாயையும் மறையுமே.

வாசகர்களைத் தவறான கலப்பு மொழிவழியில் மேலும் மேலும் பழக்கிவிட்டு அவர்கட்கு அதுதான் எளிதாகப் புரிகின்றது என்று ஏதீடு கூறுவது பொருந்தாது. தாம் எழுத்தர் அல்லர், தமிழ் எழுத்தாளர் என்ற பெயருக்கேற்ப மொழிக்காப்பும் மொழியாக்கமும் தமிழ் எழுத்துச் சான்றோர் பொறுப்பாகும்.

இக்கொள்கையினர் கருதுவதுபோல் நடப்பியம்

என்பதற்கு இதுவே பொருளானால், உலகில் அரசுத் தலைவர்கள் பேச்செல்லாம் அவரவர் பேசிய வெவ்வேறு மொழிகளில் தாளிகைகள் வெளியிட வேண்டுமல்லவா? அவ்வாறே வானொலிக்க வேண்டுமல்லவா? அப்புறம் மொழி பெயர்ப்புக்கு என்ன வேலை? கருத்துக்கள்தாம் புலப்படுத்தப்படுமேயன்றி அவ்வம்மொழிகள் தழுவப்படுவதில்லை என்பதுவே நடைமுறை நடப்பியம்.

கருத்தைப் புலப்படுத்தும் ஒரு கருவியே மொழி என்பது தொடக்கக் கருத்து. இறைவன் நீங்கலாக உலகத்து எப்பொருளும் கருவிகளே. இறைவனைக்கூட நிமித்த காரணன் என்ப. உடம்பும் ஐம்பொறிகளும், ஊர்திகளும் தகவலியங்களும் கருவிகள்தாம். இவற்றின் தூய்மைக்கும் செம்மைக்கும் ஒழுங்குக்கும் எவ்வளவு ஆய்வு நடத்துகின்றோம். உடல் நலத்துக்கென உலகம் எவ்வளவு கோடிகள் செலவழிக்கின்றது:உடல்மாயும்கருவிதானே என்று பேசுவது அறியாமையன்றோ? மொழி என்பது மனிதவுடைமை; பண்டு இன்று நாளை என எக்காலத்துக்கும் இயங்குடைமை. அதனாற்றான் 'வாழிய செந்தமிழ்’ என்றார். பாரதியார். தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாரதிதாசனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/30&oldid=551028" இலிருந்து மீள்விக்கப்பட்டது