பக்கம்:இலக்கியச் சாறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிக் கொடைக்கு ஒப்பற்ற சான்றாகும். வெல்லும் சொல் படைக்கும் வித்த கரெனத் தமிழ்கூறு நல்லுலகம் இவரைப் போற்றுகின்றது. - * . . இவர் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்குகிறார். இவர் நடை சொற் செட்டும் சுருக்கமும் தெளிவும் செறிவும் திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. புலமை நலம் சான்ற பெருமித நடை இவர் நடை. பழந்தமிழ்ச் சொற்கள் மிகுந்துவரும் இலக்கியநடை. புதுச்சொற்கள் பொலியும் புதுவகை நடை. எல்லா வகையாலும் இவரது நடை தனித்தன்மை சான்றது. பேராசிரியருடைய மூன்று வரிசைகளைக் கொண்டே இவர் தமிழ்நடையின் தனித் தன்மையினை இனம் காணலாம். இவர் பயன்படுத்தும் சொற்கள், சொல்லாக்கம், சொல்லாட்சி ஆகியவை இவர் நடையின் இயல்பினை இனங்காட்டுவன. ஆய்வு இவருக்கு இயல்பாக அமைந்ததொன்றாகும். திருக்குறளைச் செயல் நூலாக வள்ளுவமாக ஆக்கினார். கம்பனைக் கற்கும் நெறியில் புதிய தடம் அமைத்தார். அகத்திணையியல் ஆய்வில் தமிழ்க் காதல் நெறி விளக்கினார். இவை என்றும் தமிழுக்குப் பொன்றாப் புகழ் தருவன. 'மறைமலை அடிகளாரின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும் திரு.வி.க.வின் மொழி நடையும் சமுதாய நோக்கும் பேராசிரியரின் எழுத்தில் பளிச்சிடுகின்றன எனத் திறனாய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்தபோது இவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. தமிழ் மக்களின் நீண்ட நெடிய கனவுகளுக்கு உருவம் கொடுக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வடிவமைப்புக் குழுவின் தலைவராக இருந்தார். சாதனைகளால் சிறந்து விளங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல் காப்பியத் தகைஞராக - சிறப்புப் பேராசிரியராக நியமிக்கப் பெற்றவர். புலமையாலும் தலைமையாலும் சிறந்து விளங்கிய இவர், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவராகத் திகழ்ந்தார். எங்கள் பதிப்பகத்திற்குப் பெருமை சேர்க்கும் நல்லாசிரியப் பெருமக்களுள் முதன்மையான இவர்தம் படைப்புக்களைப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிட்டுப் பதிப்பகம் பேரும் புகழும் பெற்று வருகிறது: பயனுள்ள நூல்கள் வெளியிடும் ஒவ்வொரு முறையும் பூரிப்போடும் உவகையோடும் களிப்போடும் சாதனை மலர்களைச் சூடி மகிழ்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/9&oldid=751332" இலிருந்து மீள்விக்கப்பட்டது