பக்கம்:இலக்கியச் சாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

95



புலவர் அல்லர். ஆதலின் இறையுணர்வு அரும்பி வளரும் நிலையில் கோவை இயற்றப்பட்டது எனவும், திருவாசகப் பகுதிகள் இறைவன் தன்னைக் காட்டிப் பிரிந்தபின், தேறுதல் ஒழிந்த அன்பின் மிகு திறத்தாலும் மிக்க அன்பின் மிடலாலும் மணிவாசகப்பெண்ணுயிரால் புலம்பிப் பாடப் பெற்றவை எனவும் உறுதியாகக் கொள்ளலாம்; எனினும் திருவெம்பாவை போன்ற ஒரு சில திருவாசகப் பகுதிகள் கோவைக்கு முன்னும் பாடப்பட்டிருக்கலாம் என்று கொள்வதற்குக் குற்றமில்லை. கோவை ஆசிரியர்

திருக்கோவை மணிவாசகரால் பாடியிருக்க இயலாது என்பது ஒருசாரார் எண்ணம். திருவள்ளுவர் காமத்துப் பாலைப்பாடவில்லை என்பது போன்ற கருத்துக்கு ஒப்பானது இது. நம் சான்றோர் பாடியது கற்புடைக்காமம் ஆதலானும் அன்புடைக் காமம் தமிழ் இலக்கியத்தின் உரிப்பொருள் ஆதலானும், காமம் பாடுவது எப்புலவர்க்கும் நிறைவாகுமேயன்றிக் குறைவாகாது. அகத்திணை பாடாமை குறைவாகக் கருதப்பட்ட காலமும் ஒன்று உண்டு என்பதனை நினைய வேண்டும். வள்ளுவரும் மணிவாசகரும் அன்புடைக் காமத்தைப் பாடினார் எனின் மதிப்புக் குறைவாகும் என்று சொல்லுவமேல், பரணர் கபிலர் நக்கீரர் இறையனார் ஒளவையார் முதலான சங்கச் சான்றோர்கள் மதிப்புக் குறைவுடையரோ? நம் தெய்வ இலக்கியங்கள் எல்லாம்தம் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுவதற்கு ஒரு பெருங்காரணம் அகவியலக்கியத்தின் காதற் போக்குக்களை அள்ளிக்கொண்டமையேயாகும். அகத்தமிழ் கலந்தமையால் தெய்வத் தமிழ் மக்களிலக்கியம் ஆயிற்று. கற்புடைக் காமம் என்னும் அகம் பாடுவது குற்றம் எனின் அகநடையைத் தழுவிப் பாடுவது குணமாகுமா? காமம்மிகு காதலன் தன் கலவியினைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினும் இன்பெய்துவதே என்று இராமலிங்க வள்ளல் கடவுட் புணர்ச்சிக்குக் கற்புப் புணர்ச்சியை உவமிப்பர். 'உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை என்ற தொல்காப்பியத்தின்படி ஆளும் உவமை சிறப்புடையதாகக் கருதப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/97&oldid=551095" இலிருந்து மீள்விக்கப்பட்டது