பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-22-

”சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டத் தாது உகக்
கன்று தாய் மருளும்,”

எனக் கூறுகின்றார். இதேபோன்று ஐங்குறுநூறு என்னும் நூலில் தன் கொம்பில் சிக்கிய வெண்மலர்ப் பகன்றைக் கொடியுடன் மாலை வீடு திரும்பிய தாய் எருமையினைக் கண்ட கன்று, தாய் எருமையின் முகத்தைப் பகன்றைக்கொடி மறைத்த காரணத்தால் தன் தாயென்று தெரியாது மருண்டு நின்ற நிலையினைப் புலவரொருவர் பாடியிருப்பது இங்கு எண்ணி இன்புறுதற் குரியதாகும்.

"பகன்றை வால்மலர் மிடைந்த கோட்டைக்
கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்.”

ஏறு தழுவுதல்

காடும் காடு சேர்ந்த பகுதியும் முல்லை நிலம் எனப்படும்.. இந்நிலத்து மக்கள் தங்களது வீட்டில் பெண் பிறந்ததென்றால் அதனோடு ஒரு காளைக் கன்றையும் கனிவுடன் வளர்ப்பர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் பெண் பருவமடைந்து பவளப்பதுமையாக விளங்கி ஆயர் கண்களுக்கு விருந்தாவாள். உடன் வளர்த்த காளைக் கன்றும் நன்கு வளர்ந்து ’கொழு கொழு’ வென்றிருக்கும். அதனது ஒழுங்காக நீண்டு வளர்ந்த கொம்புகளும், முதுகின்மேல் பருத்த திமிலும், கழுத்தின் கீழ்த் தொங்கும் அலைத்தாடியும் காண்போர் கருத்தைக் கலங்கச் செய்யும். ஒரு குறிப்பிட்ட நாளன்று ’அக் காளையை எதிர்த்து அடக்கு பவனுக்கு என் பெண்ணைக் கொடுப்பேன்!’ என்று தந்தை பறை அறைந்து சொல்லச் செய்வான்.

குறித்த நாளன்று ஆயர் வெள்ளம் மந்தையில் திரண்டு விடும். புயபலம் படைத்த வீரர் அனைவரும் நிமிர்ந்த