பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 36 -

மயக்கும் மயிலைக் காணும்போதெல்லாம் காம் பெண்மையின் வண்மையை உண்மையாகவே உணர முடிவதால் ஒல்காப் புகழுடைய தொல்காப்பியனார் பிற பறவைகளுக்கெல்லாம் உரிய பொது ஆண்பாற் பெயராகிய சேவல் என்பது மயிலுக்குப் பொருந்தாது எனக் கொண்டு,

' சேவற் பெயர்க் கொடை சிறகொடு சிவனும்
மாயிருந் துரவி மயிலலங் கடையே '

எனக் கூறியுள்ளார். இதற்கு உரை எழுதிய பேராசிரியரும் 'மாயிருந்தூவி மயின் என்றதனால் அவை தோகை உடையனவாகிப் பெண்பால் போலும் சாயல ஆகலான் ஆண்பாற் தன்மை இல என்பது கொள்க’ எனக் கூறியுள்ளார்.

இதனைக் குறித்துப் பாடிய தமிழ்ப் புலவர்கள் இது குறிஞ்சியிலும் முல்லையிலும் வாழும் என்றும், இதனை வலையமைத்துப் பிடிக்கலாம் என்றும், இது கனத்த உடலையும் வலிமையற்ற இறக்கைகளும் கொண்டிருப்பதால் மிக உயரப் பறப்பதில்லை என்றும், பாம்புக்கும் இதற்கும் மிகு பகை உண்டென்றும், இதனைக் கண்டு அஞ்சும் பாம்பு தன் நஞ்சுடைத் தலைப் படத்தை விரித்துச் சீறி எழுமென்றும், சோழி போன்ற வெள்ளிய இறகுக் காம்பை உடைய பிலியை மயில் தானே களைந்து விடுமென்றும், மாமரத்தின் கிளைகளில் இது மகிழ்ச்சியுடன் தங்கும் என்றும் கூறி உள்ளனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலே நந்தமிழ்க் கடவுளாகிய குமரனின் வாகனமாய் இலக்கியங்களில் கூறப்படுகின்றது. மேலும் தமிழகம் வாணிகம் செய்த பொருட்களில் மயில் தலையாய ஒன்றாகும். வண்டி வண்டியாய்