பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
– 41 –

துன்பத்தினைக் கண்டு ஆற்றாது, இரை தேடத்துணிந்து புறப்பட்டுவிட்டது ஆண் பருந்து. எங்கெல்லாமோ தேடி அலைந்த அது இறுதியில் ஓரிடத்தில் காட்டு மானின் நாறிய புலாலைக் காணுகின்றது. உடனே அப்புலாலைத் தன் பேடைக்கு உணவாகக் கொண்டு வந்து மகிழ்கின்றது. இவ்வோவியத்தினை அகநானூறு என்னும் நூலிலே நாம் காணலாம்.

" கருங்கால் ஒமைக் காண்புஇன் பெருஞ்சினைக்
கடியுடை நனந்தலை ஈன்றிளைப் பட்ட
கொடுவாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய
மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை
வான்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
துளங்குநடை மரைஆ வலம்படத் தொலைச்சி
ஒண்செங் குருதி உவறியுண் டருந்துபு
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
கொள்ளை மாந்தரின் ஆனது கவரும்.”

உழைப்போர் பயன் சோம்பேறிகளுக்கே !

கற்றோர் ஏத்தும் கலித்தொகை என்னும் நூலில் ' உழைப்போர் பயமன் சோம்பேறிகளுக்குக் கிடைக்கும்' என்ற கருத்து, உயர்ந்த இடத்தில் பிரிவற்ற தனிக்கிளையின் நுனியில் கூடுகட்டி வாழும் பொல்லாத கழுகு தன் குஞ்சுகளுக்குத் தன் வாயிலிருந்த கண்ணாகிய இரையினை ஊட்ட அது குஞ்சுகளுக்குக் கிடையாமல் தவறிக் கீழே விழ, கீழிருந்த நரிக்கு அது கொண்டாட்டமாய் முடிந்தது எனக் கூறப்பட்டுள்ளது.

காக்கை கரைந்தால் . . . . .... ?

அன்றும் இன்றும் நம்முடன் ஒன்றி வாழும் பறவையாகிய காக்கை நெய்தல் நிலத்திற்கு உரியதாகவே பெரி