பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது– 46 –

ஆந்தை

ஆந்தையைப் பற்றி ஏனே விரிவாக ஒன்றும் கூறப் பெறாதிருப்பினும் அதனைப் பற்றிய பின்வரும் செய்திகளைச் செந்தமிழ் இலக்கியங்களிலே ஆங்காங்கே காண முடிகின்றது. இதனைக் கூகை எனவும் குடிஞை எனவும் மக்கள் கூறுவர். இது பட்ட மரங்களிலே காணும் பொந்துகளிலும் பாழிடங்களிலும் வாழ்வதாகும்; இரவிலே இது பெருங் குரலிட்டுக் கத்தும்; இதனைக் கேட் போர் மிகவும் அச்சம் கொள்வர். ஆந்தையின் அலறல் அன்று தீயசகுனமாகக் கருதப்பட்டது என்பதைச் சீவகன் இடுகாட்டிடத்துப் பிறந்தபொழுது அவன் அன்னை விசையை வருந்தி அழுங்கால் மங்கலமின்றிக் கூகை அலறிற்று என்று 'கூகை குழறிப் பாராட்ட' என ஆசிரியர் கூறியிருப்பதிலிருந்து அறிய முடிகின்றது. இன்றும் அவ்வாறே மக்கள் கருதுகின்றனர். கூகையினது உணவு ஊன் உணவேயாகும். வேறொன்றையும் இது உண்ணாது.

அன்றிலும் மகன்றிலும்

அன்றில் நெய்தல் நிலத்திற்குரிய பறவையாகும். இது கருநிறமுடையது. இதன் அலகு வளைந்திருக்கும். இதனது வளைந்த அலகிற்குப் புலர்வர்கள் இறுமீனை உவமை கூறுவர். ஆண்பறவையினது உச்சிச்சூட்டானது நெருப்புப்போன்று சிவந்து காணப்பெறும். இதன் குரல் ஊதுகொம்பின் ஒலியை ஒத்திருக்கும். இது தடா, பனைமரங்களில் கூடு கட்டி வாழும். இது ஊர் அரவம் அடங்கிய பின்னர் நரலும். இவ்வொலி கேட்டுத் தலைவி துயருறுவாள்.