பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
— 47 —

நெய்தல் திணை ஒழுக்கமாகிய இரங்கற் பகுதியில் இப் பறவையைப்பற்றிப் பெரிதும் புலவர்கள் பேசுகின்றனர். இதனது கண் பார்வை மாலையில் மங்கிவிடும் என்றும், பெடை மாலை நேரம் வந்துவிட்டது என்பதைத் தனது சேவலுக்கு அறிவித்து அதைத் தன் கூட்டிற்கு அழைக்கும் தன்மையது என்றும் புலவர்கள் கூறியுள்ளனர். மேலும் நீர்நிலையில் உள்ள மீன்களே இதனது உணவாகும் என்றும், இது மெதுவாக அகவும் தன்மை உடையது என்றும், பெடையுடன் கூடுகின்றபோது தன்னுடைய அலகைப் பெடையின் அலகினுள் நுழைத்துக்கொண்டு கூவும் என்றும், காகம், குருகு, தூக்கணாங் குருவி என்பவைகள் இதனுடன் சேர்ந்து வாழக்கூடிய பறவைகள் என்றும் இலக்கியங்கள் பகருகின்றன. புலவர்கள் "பாங்கி அருளியல் கிளத்தல்" என்ற துறைக்கு, குருகு, தூக்கணாங்குருவி, காக்கை இவற்றுடன் அன்றிலையும் உதாரணமாகக் கூறுவர்.

மேற்கூறிய கருத்துக்களைப் பின்வரும் செய்யுள் பகுதிகள் நன்கு விளக்குகின்றன.

" ஏங்குவயிர் இசைய பெருவாய் அன்றில்"

(குறிஞ்சிப் பாட்டு).
" எலிதகைந் தன்ன செந்தலை யன்றில் "
" அன்றிலும் பையென நரலும்"
(குறுந்தொகை).
" அன்றில் பேடை அரிக்குரல் அழைஇய
சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்ப"
(மணிமேகலை).
" எனப்பார்ப்பர் அன்றில் அலகொடு அலகுற்று
இடுங்கலவிதனைப் பார்ப்பர்"
(மதுரைக் கோவை).