பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 49 –

எனவே உன்னைவிட நானே இன்பநலம் வாய்க்கப் பெற்றவள் " என்று கூறி எள்ளுவதாகப் புலவர் பாடியிருப்பது போற்றுதற்குரியதாகும். இதைப் போன்றே தலைவி ஒருத்தி அன்றிலை நோக்கிப் பின்வருமாறு வருந்திக் கூறுவதாகக் கலித்தொகையில் ஒரு செய்தி காணப்படுகின்றது. "கரும்பனையிலே வாழும் அன்றில் பறவையே! தலைவனைப் பிரிந்து கலங்கி வாழும் என்னைப் பெருந்துயரத்தில் ஆழ்த்த ஆரவாரிக்கின்றாயா? அன்றி, முன்பு கூடிப் பின்பு பிரிந்தாரை என்போல் கொண்டு இருப்பதால் வருந்துகின்றாயா? நீ கூறுவாயாக!"

பொதுமகளும் அன்றிலும்

அன்றிலைப் பற்றிய பிறிதொரு சுவையான செய்தி நாலடியாரிலே கவினுறக் காணப்பெறுகின்றது. செல்வந்தன் ஒருவன் பொதுமகள் ஒருத்தியின் வலையிலே வீழ்ந்தான். அவனிடத்தில் செல்வம் இருக்கும் வரையிலும் ஆசை வார்த்தைகளைக் கூறிவந்த அப்பொதுமகள் செல்வம் கரைந்ததும் அவனை வெறுத்து ஒதுக்கினள். அதுகால் அவன் அவள் முன்னர்க்கூறிய அன்பு வார்த்தைகளை எண்ணுகின்றன். "புணர்பிரியா அன்றிலும்போல் வாழ்வோம்" என அவள் கூறியது அவன் நினைவிற்கு வருகின்றது. அத்தகைய அன்பு வார்த்தைகளைக் கூறிய அவள் இன்று தன்னை மிகவும் வெறுக்கின்றாளே என்று தலைவன் வருந்துகின்றான். அவ்வாறு வருந்தும் தலைவன் தன் நெஞ்சைப் பார்த்துக் கூறுவது போன்று புலவர் பாடியுள்ளார். அப் பாடல் வருமாறு:

"பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினுள்
நிற்றியோ? போதியோ? நீ "

[நன்னெஞ்சே