பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 53 -

மேகத்தில் கிடைக்கும் நீரையுண்டு மகிழும் எனக் கூறுவர். ஆங்கிலப் புலவர்களைப் போன்று தமிழ்ப் புலவர்களும் வானம்பாடியின் இனிய ஒலியைக் கேட்டு மகிழ்ந்தனர். புள் காணல் மிகவும் அருமையாக இருந்ததால் அதன் வாழ்வு பற்றிய குறிப்பொன்றும் கிடைப்பதற்கில்லை." துளிநசைப் புள்ளின் நளிநசைக் கிரங்கி' எனவும், ' வானம் வாழ்த்தி ' எனவும், 'தற்பாடிய தளியுணவின் புள் எனவும் சங்க இலக்கியப் புலவர்களும், ' குடம்பை தனித்தொழிய' என வள்ளுவரும், 'துளிசை வேட்கையான் இசைபாடும் புள் எனக் கல்லாடரும், நீரீடும்பை புள்ளினுள் ஓங்கல் அறியும் ' என நான்மணிக்கடிகை ஆசிரியரும் இப் பறவையினைப் பற்றித் தம் நூல்களில் குறித்துள்ளனர்.

குருவி

குருவி இனம், சிட்டுக்குருவி, கரிக்குருவி, தேன் சிட்டு, தூக்கணாங் குருவி எனப் பலவகைப்படும். வீட்டின் இறப்பிலே கூடுகட்டித் தங்கும் குருவியின் சிறகிற்கு ஆம்பற் பூவின் வாடலை உவமையாகக் கூறுவர். மேலும் இது இல்லின் முற்றத்திலே உலர்த்தப்பட்டிருக்கும் தானிய வகைகளை உண்டு சாணகத்தைக் குடையும் என்று கூறப்படுகின்றது. தினைக் கொல்லையில் காணும் தினையினையும் குருவிகள் தின்று திரும்பும். அவைகள் தினை தின்று கூக்குரலிடும். குருவி ஒரு நொடியில் 50 முறை தன் சிறகுகள் அடித்துக்கொள்ளும் எனச் சொல்லப்படுகின்றது. உயிர் நூலோர் குருவியின் குலைத்துடிப்பு (நாடித்துடிப்பு) ஒரு நொடியில் 1000 முறை துடிக்கிறது என்று கூறுவர்.

4