பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 57 -

நெருங்கியது. ஆனால் அதுபோழ்து சேவலன்னம் அங்கு தோன்ற, பேடை தன் மடமைக்கு நாணிப் பூக்கள் செறிந்த பகுதியில் சென்று மறைந்து நின்றது. இவ்வெழிலோவியத்தை மாண்புறு மருதக் கலியில் காணலாம். அது வருமாறு :

'மணிகிற மலர்ப்பொய்கை மகிழ்ந்தாடும் அன்னம் தன்
அணிமிகு சேவலை அகலடை மறைத் தெனக்
கதுமெனக் காணாது கலங்கி அம் மடப்பெடை
மதிநீழல் நீருட்கண்டு அதுவென
வந்தோடித் துன்னத்தன் எதிர் வரூஉந் துணைகண்டு
மிய காலனிப்
பன்மல ரிடைப்புகூஉம் பழனஞ்சேர் ஊர்.'

பிறபறவைகள்

மேற்கூறியவற்றைத் தவிரத் தமிழ்நாட்டில் வாழ்ந்த-வாழும் பறவைகளாகிய வங்கா, எழால், குறும்பூழ், கணந்துள், கெளதாரி, கொக்கு, மீன்கொத்தி, யானையங்குருகு, நுளம்பு, வெளவால் முதலியவற்றைப் பற்றி எல்லாம் தமிழ் இலக்கியங்களிலே பல செய்திகளைப் பார்க்கக்காணலாம். இவற்றுள் வங்கா என்பது பாலை நிலத்திற்குரியதாகும். இதனது எதிரியே எழால். இது புல்லுாறு எனவும் வழங்கப்பெறும். இப்பறவை வங்காவினை அடித்துக்கொல்லும் ஆற்றல் உடையது. வங்காவானது சிவந்த காலையும் வேய்ங்குழலின் இனிய ஓசையையும் உடையது. குறும்பூழ் என்னும் பறவை செந்நிறமுடைய காலையும் உளுந்தஞ்செடியின் அடியை ஒத்த நிறத்தினையும் உடையது. இது பாணர் முதலியவர்களுக்குச் சிறந்த உணவாகப் பயன்பட்டது.