பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. விலங்கு-பறவைச் சண்டைகள்

கோழி, தகர், யானை, பூவை, குதிரை, சிவல், கிளி முதலியவற்றை ஒன்றோடொன்று சண்டை செய்ய விட்டும், ஒட விட்டும் வேடிக்கை பார்ப்பது மரபு என்று புறப் பொருள் வெண்பாமாலை கூறுகின்றது. போரில்லாக் காலங்களில், அரசரும் தமிழ் வீரர்களும் யானைச் சண்டை, கோழிச் சண்டை இவற்றைப் பார்த்து மகிழ்வர் என்பதைப் பின்வரும் கலிங்கத்துப் பரணி பாடலால் நன்கு அறியலாம்.

  

"வருசெருவொன் றின்மையினான் மற்போரும்
   சொற்புலவோர் வாதப் போரும்
   இருசிறைவா ரணப்போ மிகன்மதவா
   ரணப்போரு மினேய கண்டே"

முதற்குலோத்துங்கன் தன் பகைவரானவரையும் வென்று தனக்குக் கீழ்ப்படுத்திக் கொண்டமையால், தான் செய்யத்தக்க போர் ஒன்று மின்மையால், மற்போரும் சொற் புலவோர் வாதப் போரும், இரண்டு சிறகுகளையுடைய கோழிகளின் சண்டையும், வலிமையுடைய மதத்தைப் பொழியும் யானைகளின் சண்டையுமாகிய இவை போன்றவற்றைப் பார்த்து மகிழ்ந்தான் என்பதே இப்பாடலின் பொருள்.