பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

பக்க இயங்களின் (பக்க வாத்தியங்களின்) ஆரவாரத்துடன் காவடிக் குழு கோயிலைச் சுற்றி வலம் வந்தது. யானும் குழுவுடன் கலந்து கொண்டேன். இறுதியில் கோயில் கோபுர வாயிலின் அருகில் காவடிக் குழு நெடு நேரம் முருகன் புகழ் பாடிக்கொண்டு ஆடியது. முடிவில் கோபுர வாயில் எதிரில் தேங்காய் உடைத்துச் சூடம் கொளுத்திப் படையல் செய்யப் பெற்றது.

'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்றபடி, யான் இடையிடையே காவடிக் குழுவினரிடம் சில செய்திகளை விசாரித்தேன். அவர்கள் அந்த வட்டாரத்து மக்களாம். அக்குழுவில் பல சாதியினரும் உள்ளனராம். ஆண்டாண்டு காலமாக இவ்வாறு செய்வது வழக்கமாம். முருகன்மேல் பாடிக்கொண்டு பெருமாள் கோயில் வாயிலில் படையல் செய்வது ஏன்?- என்று வினவினேன். இது பெரியவங்க நாளிலிருந்து நடக்குது என்ற பதில் கிடைத்தது. இது முதலில் முருகன் கோயிலாக இருந்ததாமே-என்று கேட்டேன். " அப்படித்தான் சொல்கிறாங்க" என்ற பதில் வந்தது.

அலர்மேல் மங்கை

சிவன் கோவில்களுக்குள்ளும் திருமால் கோவில்களுக்குள்ளும் பெண் தெய்வக் கோயில்களும் இருக்கும். ஆனால் வேங்கட மலைக்கோவிலுக்குள் பெண் தெய்வக் கோயில் இல்லை. இது பற்றிப் பூசனையாளர் ஒருவரை வினவினேன். திருமாலின் மனைவி அவர் மேல் சினங் கொண்டு மலைக்குக் கீழே சென்று தங்கியிருப்பதாக அவர் கூறினார். பின்னர் அந்த அன்னை தங்கியிருக்கும் அலர்மேல் மங்கைபுரம் சென்றேன். அது. அடிவாரத்தில் சில கல் தொலைவுக்கு அப்பால் இருக்கிறது.