இலக்கியப் பெண் குழந்தைகளையும் ஈன்றெடுக்கும் வாழ்வியல் தலைவனாவான். அவன் எக் குழந்தைகளைப் பெற்றெடுத் தாலும் மொழியாகிய தலைவியொடு முரண்படா வாழ்க்கை நடத்துதல் வேண்டும். எழுத்தற வாழ்விலும் மொழித் தலைவியை அடிமைப்படுத்தி வாழும் எழுத்துத் தலைவர்கள், தம் விருப்பம்போல் தான்தோன்றித் தனமாக வாழ்ந்து மொழி நலத்தைச் சிதைக்கின்றனர்; பின்னர் தாமும் சிதைந்து போய்த் தம் வாழ்வையும் சிதைத்துக் கொள்கின்றனர்.
சில காலம் எல்லையொடு, சிறு தொழில் மேவி, சிற்றறிவால் வாழும் அச் சிறுமை எழுத்தர்கள், என்றும் நின்று இயங்குவதாகிய மொழி நலத்துக்குக் கேடு செய்வது இரங்கத்தக்கது. எனவே, எழுத்து வாழ்க்கை மேற்கொண்டொழுகும் இலக்கண இலக்கிய ஆசிரியர்கள், தாம் கற்ற எல்லைப் பயன் கண்டு தம் எழுத்தற வாழ்வைச் செப்பமாக விளங்கிக் கொண்டு, மொழிக் குலைவு செய்யாமல் நிற்றற்கு உறுதுணையாக இக் கட்டுரை வெளியிடப் பெறுகின்றது.
'மொழி நலமே இலக்கிய நலம்; மொழி வளர்ச்சியே இலக்கிய வளர்ச்சி' - என்கின்றது, அளவில் சிறிய இக் கட்டுரை நூல்.
இதன் கருத்துகள் ஆயப்பெறலாம்; மறுக்கவும் பெறலாம். ஆனால் அவ்வாய்வாலும் மறுப்பாலும் அவற்றுக் கடிப்படையாயுள்ள மொழி மேலும் சிறப்புறும் வழிகள் சொல்லப் பெறுதல் வேண்டும்.
‘வாழ்வியல்':- என்பது இன்றியமையாதது.