சிறப்புக் சூறிப்பு
இக் கட்டுரை படிக்கப் பெற்றவுடன், கருத்தரங்கத் தலைவ ராக வீற்றிருந்த பேராசிரியர் திரு. ௮.௪. ஞானசம்பந்தனார் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் எழுந்து, “இக்கட்டுரை மிகவும் சிறப்பான கட்டுரை! (அவர் கூறிய சொற்கள்: மகா அற்புதமான கட்டுரை) பண்டாரகர்ப் பட்டத்திற்குரிய கட்டுரைபோல் மிகவும் சிறப்பாக எழுதப்பெற்றுள்ளது. என் முப்பத்தைந்து ஆண்டுக் கால இலக்கிய வாழ்க்கையில் இது போன்றதொரு சிறந்த கட்டுரையை நான் படித்தது மில்லை; கேட்டதுமில்லை. இக் கட்டுரையை எல்லாரும் கட்டாயம் படிக்கச் செய்தல் வேண்டும். “ஒரு கட்டுரை யென்றால் எப்படி யெப்படிப் பாகுபாடு செய்து எழுதுதல் வேண்டும்; என்னென்ன கருத்துகளை விளக்குதல் வேண்டும்' என்பதற்கு இக் கட்டுரை சிறந்த இலக்கணமாக இருக்கிறது. இதனை எழுதிய பெருஞ்சித்திரனார் அவர்களை மிகவும் பாராட்டுகின்றேன். அவர் எழுதிய இக்கட்டுரைக் கருத்துகளில் சில நம் கருத்துகளுக்கு மாறுபட்டு இருக்கலாம். ஆனால் அக் கருத்துகள் மிகச் செப்பமாகவும் தெளிவாகவும் கூறப் பெற்றுள்ளன. அவ்வளவு சிறப்பான (அற்புதமான) கட்டுரை. இக் கருத்தரங்கைக் கூட்டிய கரந்தைப் புலவர் கல்லூரித் தலைவருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன். இக் கட்டுரையைச் சிறு நூலாக அச்சிட்டு, இங்குப் படிக்க வருகின்ற புலவர் மாணவர் ஒவ்வொருவருக்கும் கொடுத்துப் படிக்கச் செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் கட்டுரை எப்படி எழுதப் பெறுதல் வேண்டும் என்பது அவர்களுக்குத் தெளிவாக
விளங்கும். இவ் வேண்டுகோளைக் கட்டாயம் செயற்படுத்துமாறு கல்லூரித் தலைவரை நான் கேட்டுக் கொள்கிறேன்!” - என்று மனம் விட்டுப் பாராட்டி
அமைந்தார்கள். அவர் கருத்துப்படியே இக் கட்டுரை தென்மொழி வெளியீடாக முன்னுரையுடன் வெளியிடப் பெற்றுள்ளது என்பதை அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். (ஆ-ர்)