பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
85
 

ஆடை முதலியனவும் படுவதைச் சகிக்காத பண்பு) ஆகிய நான்கு குணங்களும் தேர் யானை, குதிரை, காலாட்படைகளாக அமைந்துள்ளன. உடல், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐந்து புலன்களும், நல் அமைச்சர்களாக இருக்கின்றன, அவள் தன் கால்களில் அணிந்துள்ள சிலம்புகள் முரசு வாத்தியமாக இருக்கின்றன. அவளுடைய கண்கள் வேல் படையும், வாள் படையுமாக அமைந்துள்ளன. இவ்வாறான அரசர்கட்குரிய அமைப்புடன் முகமாகிய சந்திரனது குடையின் கீழ், பெண்மை என்னும் அரசினைச் செலுத்திக் கொண்டிருக்கின்றாள்" என்று கூறியது.

நளன் அன்னத்தின் மொழிகளைக் கேட்டு, வியந்து மகிழ்ந்து “என்னிடம் ஒன்றுமே அவளைப் பற்றிக் கூறாமல் திருமணத்தை முடித்து வைக்கலாமே. நீ அவளது அழகையும், பண்பையும் இவ்வாறு கூறியதனால் என் உள்ளமும், ஆவியும், சோர்வடைகின்றன. அந்தத் தமயந்திக்கும், உனக்கும் எப்படித் தொடர்புண்டு?" என்று வினவினான்.

இவ்வாறு வினாவிய நளனுக்குத் தமயந்தியின் சிறப்பை நடை அழகின் மூலம் உணர்த்தக் கருதிய அன்னம் மன்னா! தமயந்தி நடை அழகில் சிறந்தவள். அவளது நடை அழகைக் கற்க அங்கு எம் இனமாகிய அன்னங்கள் செல்லும். அவைகளோடு நானும் செல்வதுண்டு. இதுவே எனக்கும் அவளுக்கும் இருக்கும் தொடர்புக்குக் காரணம்" என்று' கூறியது.