பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலன் விடுத்த தூதன்

93

சூரன் தங்கையாகிய அசமுகி கண்ணுற்றாள். அவளைத் தன் தமையனிடம் கொண்டு சேர்க்க விரும்பிய அசமுகி, பலவாறு இழித்துரைத்து எடுத்துச் செல்லத் துணிந்தாள். அவ்வேளையில் சோலையைக் காவல் புரிந்த மாகாளன் வெளிப்பட்டு அசமுகியின் கையை வாளால் வெட்டி வீழ்த்தினான். இலக்குவனால் மூக்கிழந்த சூர்ப்பண கையைப் போன்று மாகாளனால் கையிழந்த அசமுகி கதறியழுதாள். வீரமகேந்திரத்தில் வீற்றிருந்த சூரனை நினைத்து ஓலமிட்டாள். அவனது அவையிற் புகுந்து தனக்கு நேர்ந்த சிறுமையை முறையிட்டாள்.

இராமன் விடுத்த தூதன்

இராம தூதனாகிய அனுமன் இலங்கையடைந்தான். அவன் சிறையிலிருந்த செல்வியாகிய சீதையைக் கண்டு ஆறுதல் கூறினான். வீரமாநகரமாய் விளங்கிய இலங்கையில் விண்ணவர், அரக்கர்கோன் அடிபணிந்து தொண்டு புரியும் நிலையினைக் கண்டு வியந்தான். இராவணன் அரசவையடைந்து இறு மாந்திருந்த அவன் செவிகளில், தன்னை ஆட்கொண்ட நாயகன் பெருமையை நன்றாக எடுத்துரைத்தான். அறநெறி தவறிய அவ்வரசனை நோக்கி, “உன் செல்வம் சிதையாதிருக்க வேண்டுமாயின் உடனே சீதையை விடுக; உனது ஆவியை ஒரு பொருளாகப் போற்றுவாயாயின் அப் பெருமான் தேவியை விடுக” என்று அவ்வனுமன் அறுதியிட்டு உறுதியாக உரைத்தான்.

வேலன் விடுத்த தூதன்

அங்ஙனமே வீரமகேந்திரத்தை யடைந்த முருக தூதனாகிய வீரவாகுவும் அந் நகரின் சிறப்பையெல்லாம் கண்டு வியந்தான். அங்கு வானவர்