பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலன் விடுத்த தூதன்

97

மண்டபத்தை யடைந்தான். மேரு மலையை வில்லாகக் கொண்ட மேலவன் மைந்தனாகிய வேலவன் விடுத்த தூதன் யான்; இச்சூரன் அரியாசனத்தில் வீறுடன் இருக்க, எளியனாய் அவன்முன் சென்று நிற்றல் எம் பெருமான் பெருமைக்கு இழிவைத் தரும் என்று எண்ணினான். அப்பெருமான் திருவடியை நினைந்து உருகினான். அந்நிலையில் முருகவேள் திருவருளால் பேரொளி வீசும் பீடமொன்று விரைவில் அங்கு வந்துற்றது. அதனைக் கண்ட வீரவாகு, ‘இஃது எம் பெருமான் அனுப்பியருளிய ஆசனம் போலும்!’ என்றெண்ணி அகமகிழ்ந்து அதன் மீது ஏறியமர்ந்தான்.

சூரன் வினாவும் வீரன் விடையும்

வீரவாகுவின் செயலைக் கண்ட சூரன் வெஞ்சினங் கொண்டு உடம்பெல்லாம் வியர்க்கவும், விழிகளில் தீப்பொறி பறக்கவும் பற்களைக் கடித்தான். ‘இங்குத் துணிந்து வந்த நீ யாவன்?’ என்று வினவினான். அது கேட்ட வீரவாகு, ‘அசுரனே! இந்திரன் துயரைப் போக்கித், தேவரைச் சிறையினின்றும் நீக்கி, அவர்க்குப் பண்டைச் சிறப்பையெல்லாம் ஆக்கி வைத்தற்கு ஆதி முதல்வனாகிய முருகவேள் திருச்செந்துரில் எழுந்தருளியுள்ளான்; அப்பெருமானுக்கு அடியவன் நான்; நின் தம்பியாகிய தாரகனையும் கிரவுஞ்சம் என்னும் பெரு வெற்பையும் எளிதிற் கொன்றொழித்த வேல் வீரனாகிய குமரவேள் உன்னிடம் இன்னருள் கொண்டு என்னைத் தூது அனுப்பினான்; வானவர்க்குத் தந்தை முறையினரான காசிப முனிவர் தந்த மைந்தனாகிய நீ அவ்வானவரைச் சிறைசெய்தல் முறையாமோ? நீ வேத நூல் முறையினின்றும் விலகினாய், அற்பமான பொருள்களில் ஆசை