பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

இலக்கியத் தூதர்கள்

கொண்டாய் அளவிறந்த காலம் நீ அருந்தவம் புரிந்து இறைவன்பால் அழியாத ஆயுளையும் செல்வத்தையும் பெற்றாய்; அவற்றைத் தவருண நெறியிலே சென்று அழித்துக் கொள்ளுதல் தகுமோ? நீயும் நின் சுற்றமும் நீண்ட செல்வத்துடன் வாழ வேண்டுமாயின் வானவரைச் சிறையினின்றும் விடுக! அறநெறியிலே அரசு புரிக! அங்ஙனம் செய்யத் தவறினால் செவ்வேள் இங்கு எழுந்தருளி, நின்னையும் நின்னைச் சேர்ந்த அசுரர் கூட்டத்தையும் கொன்றொழித்தல் உறுதியாகும்” என்று தூதரை யோதினான்.

சூரனின் வீரமொழி

வீரவாகு விளம்பிய சொற்களைக் கேட்ட சூரன் மனத்தில் கடுஞ்சினம் மூண்டது. அவன் கையொடு கையறைந்து கடுமையாகப் பேசத் தொடங்கினான். “ஆயிரத்தெட்டு அண்டங்களையும் வென்று, இணையற்ற தனியரசு புரியும் எனக்கு இச்சிறுவனோ அறிவுரை சொல்லத் தலைப்பட்டான்? அசுரர் குலத்தை வருத்திய வானவரைச் சிறையில் கொணர்ந்து அடைத்தது தவருகுமோ? முருகனாகிய இச்சிறுவன் தந்தையார் எனக்கு முறையாக அளித்த வரங்கள் விணாகுமோ? போர் புரிந்து என்னை வெல்ல வல்லார் யாரே? நான் அவ்வானவரை விடமாட்டேன்; ஏதும் அறியாத இளம்பிள்ளையின் சொல்லைக் கேட்டு, இங்குத் தூதனாக வந்த உனக்கு உயிர்ப்பிச்சை தந்தேன்; பிழைத்துப் போவாய்” என்று சூரன் வீரமொழி கூறினான்.

வேலன் பெருமையை விளக்குதல்

இம்மொழிகளைக் கேட்ட முருகதூதனது உள்ளத்தில் பெருஞ்சினம் முறுகி எழுந்தது; மெய்ம்மயிர்