பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரன் விடுத்த தூதன்

107

காதல் வெள்ளத்தால் அலைமோதித் தடுமாறும் நிலையினைப் புலவர் விளக்கும் திறம் பெரிதும் போற்றற்குரியதாகும்.

நளனது காதல் உள்ளம்

‘அன்னம் இந்நேரத்தில் குண்டினபுரத்தைக் குறுகியிருக்குமோ ? இந்நேரத்தில் அப்பெண்ணரசியைக் கண்டிருக்குமோ ? இந்நேரத்தில் அவள்பால் எனக்குள்ள காதலை இயம்பியிருக்குமோ? அங்கிருந்து திரும்பி யிருக்குமோ?’ என்று கூறிப் பெருமூச்சுவிடும் நளனது காதல் உள்ளத்தைப் புலவர் புலப்படுத்துகிறார்.

அன்னம் தமயந்தியைக் கண்ணுறல்

நளன் அனுப்பிய காதல் தூதாகக் குண்டின புரச் சோலையைக் கண்டடைந்த அன்னம், ஆங்குத் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த தமயந்தியைக் கண்டது. அவளும் அவ்வன்னத்தைத் தனியிடத்தே அழைத்துச் சென்று, தன்னை நாடி வந்த செய்தியை நவிலுமாறு வேண்டினாள். அவள் உள்ளங் களிகொள்ளுமாறு, அன்னம் நளனது பெருமையை நன்கு விளக்கியது. “பெண்ணரசே! உனக்கேற்ற மன்னன் ஒருவன் உள்ளான்; அவன் அறநெறி பிறழாத அன்புடையான் ; தண்ணளி நிறைந்த உண்மையாளன் ; செங்கோன்மை தவறாத சீரிய வேந்தன் ; மங்கையர் மனங் கவரும் தடந்தோளான் ; மண்ணுலகிலும் விண்ணுலகிலும் தன்னேரில்லாத தலைவன்; அறங்கிடந்த நெஞ்சும், அருள் ஒழுகும் கண்ணும், மறங்கிடந்த திண்டோள் வலியும் கொண்டவன்; அவனுக்குத் திருமாலையன்றி உலகிலுள்ள தேர்வேந்தர் எவரும் ஒப்பாகார்; அன்னவனையே நீ