பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

இலக்கியத் தூதர்கள்

மாகிய உள்ளறையில் கற்பென்னும் தாழிட்டுப் பூட்டியிருந்த நிறைக்கதவம் அவள் காதல் வேகத்தால் தானே திறந்தது. அவள் நளனது பேரழகைத் தன் கண்களால் நன்கு பருகினாள். ‘காவலைக் கடந்து கன்னிமாடம் புகுந்த நீ யார்?’ என்று அவனை வினவினாள். ‘விண்ணவர் விடுத்த தூதனாக யான் இங்கு வந்தேன் ; நான் நிடத நாட்டு வேந்தன்; நளன் என்பது என், பெயர்’ என்று நளன் தன்னை இன்னானென அறிவித்தான்.

தமயந்தியின் வேண்டுகோள்

நளனது தூது மொழிகளைக் கேட்ட நங்கையாகிய தமயந்தி, “மன்னனே ! நின்னை மணம் புரிவதற் கென்றே இச்சுயம்வரம் நடைபெறுவது என்பதை அறிக” என்று மனமுருகக் கூறினாள். நான் சுயம்வர மணமாலையைச் சூட்டுவதற்கு அத் தேவர்களுடன் நீயும் சுயம்வர மண்டபத்திற்கு எழுந்தருள்க” என்று கனிந்துருகி வேண்டினாள்.

நளன் தலைத்தூதன்

தமயந்தியின் மனக்கருத்தை யறிந்து மீண்ட மன்னன், இந்திரனைச் சந்தித்தான். அவள் உரைத்த வன்மொழியும், தான் உரைத்த இன்மொழியும் எடுத்தியம்பினான். அவன், தமக்குச் செய்த நன்றியைப் பாராட்டி இந்திரன், இயமன், வருணன், தீக்கடவுள் ஆகிய தேவர்கள் நால்வரும் வரங்கள் பல வழங்கினர். இம்முறையில் இந்திரன் விடுத்த தூதனாய்த் தமயந்தி பாற் சென்ற நளன் காதலுரைக்கும் தூதனாயினும் தானே வகுத்துரைக்கும் வல்லவனாதலின், அவன் தூதருள் தலையாயவன் ஆவான்.