பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10. சீவகன் விடுத்த தூதன்

குறை போக்க வந்த நிறைநூல்

இயல், இசை, நாடகம் என்னும் முப்பிரிவினை உடையதாகிய ஒப்பரிய தமிழ்மொழியில் பண்டை நாளில் பற்பல நாடக நூல்கள் இருந்தன என்பர். சிந்தையள்ளும் சிலப்பதிகாரம் ஒன்றே செந்தமிழ் நாடகக் காப்பியமாக இன்று நாம் காணக் கிடைக்கின்றது. அதைப் போன்றதொரு நாடகநூல் இல்லாத பெருங் குறையினைப் போக்க வெழுந்த அருந்தமிழ் நாடக நூல் மனோன்மணீயம் ஆகும். மனோன்மணி யென்னும் மங்கை நல்லாளைத் தலைவியாகக் கொண்டு ஆக்கப்பெற்ற அரிய நூல் அதுவாகும்.

சுந்தரர் செந்தமிழ்த் திறம்

சென்ற நூற்றாண்டில் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகவும், பின்பு நெல்லை இந்துக் கல்லூரியின் முதல்வராகவும் விளங்கிய பேரறிஞர் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ்த் தாயின் முடிமணியாக அணியத் தக்க மனோன்மணியத்தை இயற்றியளித்தனர். அவர் ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் சிறந்த புலமையாளர்; தத்துவ நூலாராய்ச்சியுடன் வரலாற்றாராய்ச்சி, மொழி யாராய்ச்சி முதலியவற்றிலும் சிறந்தவர். தமிழிற் கவி பாடும் திறன் நன்கு வாய்க்கப்பெற்றவர். சைவசமயக் குரவர்களில் ஒருவராகிய திருஞான சம்பந்தரின் காலத்தை முதன் முதலாக ஆராய்ந்து அறுதியிட்டு உரைத்தவர் இவ்வறிஞரே. அது தமிழ் இலக்கிய ஆராய்ச்சி செய்வார்க்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கிவருகிறது.