பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

இலக்கியத் தூதர்கள்

லில்லாத அஃறிணைப் பொருள்களையும் தூது விடுக்கும் முறை, இலக்கிய வழக்கில் காணப்படுகின்றது. இவ்வழக்குப் பற்றியே,

“கேட்குந போலவும் கிளக்குந போலவும்
இயங்குந போலவும் இயற்றுந போலவும்
அஃறிணை மருங்கினும் அறையப் படுமே”

என்று பின்னாளில் நன்னூலார் இலக்கணம் வகுக்க வேண்டியதாயிற்று.

தூது செல்லும் பத்து

இரத்தினச் சுருக்கம் என்னும் நூல் தூது விடுத்தற்குரிய பொருள்களாகப் பத்தினைக் குறிப்பிடுகின்றது. அன்னம், மயில், கிளி, மேகம், நாகணவாய்ப் புள், தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு என்னும் இவற்றுள் ஒன்றைப் பொருளாகக் கொண்டு, புலவர்கள் தம் புலமை கலந்தோன்று மாறும் இலக்கிய நயம் பொதுளுமாறும் தூதிலக்கியத்தை ஓதுகின்றனர்.

“இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி-நயந்தகுயில்
பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈ ரைந்துமே
தூதுரைத்து வாங்கும் தொடை”

என்னும் பழம்பாட்டால் அவ்வுண்மை புலனாம்.

சங்க காலத் தூது

கடைச் சங்கத் தொகை நூல்களுள் தலைமை சான்ற புறநானூற்றுள் பிசிராந்தையார் என்னும் பெருந்தமிழ்ப் புலவர் தம் ஆருயிர் நண்பனாகிய கோப்பெருஞ் சோழனுக்கு அன்னச்சேவலை அருந்தூது விடுத்ததாக நறுந்தமிழ்ப் பாடலொன்று உள்ளது.