பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

இலக்கியத் தூதர்கள்

யுள்ளார். அக்கதை ஆங்கிலத்தில் ஆலிவர் கோல்ட்ஸ்மித் என்பார் ஆக்கியுள்ள ‘துறவி’ (The Hermit) என்னும் கவிதைக் கதையினைத் தழுவிய தாகும். அதனையும் ஆசிரியர் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ற வகையில், கற்போர் உள்ளத்தைக் கவருமாறு பொற்புறப் பாடியிருப்பது பாராட்டத் தக்கதாகும்.

மனோன்மணீயத்தின் மாண்பு

இந்நாடக நூல் தோன்றிய நாள் தொட்டு அறிஞர்களின் மதிப்பிற்கும் பாராட்டிற்கும் உரியதாயிற்று. அந்நாள் முதல் இந்நாள் வரை இதைப் போன்றதொரு நூல் தோன்றாதிருப்பதே இதன் பெருமைக்கு ஏற்ற சான்றாகும். இந்நூலில் மக்கள் அறியவேண்டிய அரிய பொருள்கள் பலவற்றை, உரிய இடங்களில் வெளிப்படையாகவே விளக்கியுள்ளார். நூல் முழுதும் தத்துவக் கருத்துக்களை உள்ளுறையாக அமைத்திருப்பது ஆசிரியரின் உயர்ந்த நோக்கையும் ஆழ்ந்த புலமையையும் புலப்படுத்தும். இந்நூல் செய்யுள் நடையில் அமைந்திருப்பினும் பெரும் பகுதியான ஆசிரியப்பாக்கள் உரைநடை போன்றே தோன்றும். இடையிடையே வரும் பல வகையான பாக்களும் பாவினங்களும் கருத்துக்களுக்கேற்ற சந்தமுடையனவாக வந்துள்ளன. தமிழரின் உயர்ந்த பண்பாட்டைப் புலப்படுத்துவது ஒன்றே ஆசிரியரின் குறிக்கோளாதலின், அதற்கேற்ப நாடகம் நிகழும் இடத்தையும் நாடகப் பாத்திரங்களையும் அமைத்துக் கொண்டார்.

நாடக உறுப்பினர்

இந்நாடகத்தில் வரும் உறுப்பினர் எண்ணிலராயினும் அவருள் முக்கியமானவர் ஒன்பதின்மர் ஆவர்.