பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீவகன் விடுத்த தூதன்

115

சீவகன், குடிலன், சுந்தர முனிவர், நடராசன், நாராயணன், பலதேவன், புருஷோத்தமன் ஆகிய எழுவரும் ஆண்பாலார் ; மனோன்மணி, வாணி ஆகிய இருவரும் பெண்பாலார். நூல் முழுவதும் மனோன்மணியைக் குறித்த செய்திகளாகவே அமைந்திருத்தலால், ஆசிரியர் இதற்கு ‘மனோன்மணியம்’ என்ற பெயரைச் சூட்டியுள்ளார்.

பாத்திரங்களின் பண்புகள்

ஆசிரியர் சுந்தரம் பிள்ளை நாடக உறுப்பினர்களின் பண்புகளை நூலின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை சிறிதும் வழுவாத முறையில் படம் பிடித்துக் காட்டுவதுபோல வகுத்துரைப்பது வியத்தற்குரிய ஓர் அமிசமாகும். சீவகனைக் கள்ள மில்லாத வெள்ளை உள்ளத்தகைவும், குடிலனை வஞ்சகம்நிறைந்த நெஞ்சினனாகவும், சுந்தரமுனிவரை உயர்ந்த சிந்தையுடைய செந்தண்மையாளராகவும், நடராசனை ஒரு நல்லறிஞனாகவும், நாராயணனை நற்குணங்கள் நிறைந்த போர் வீரனாகவும், பலதேவனைக் கயமைக் குணமுடைய இழி மகனாகவும், புருஷோத்தமனை வல்லமை வாய்ந்த நல்லாட்சி புரியும் அரசனாகவும், மனோன்மணியை அறிவும் அழகும் அருங்குணமும் ஒருங்கே அமைந்த தலைவியாகவும், வாணியைக் கற்பிற் சிறந்த பொற்புடைய தோழியாகவும் வகுத்துக் கொண்டு கதையினை அமைக்கும் ஆசிரியரின் கலைத்திறம் கற்பாரை வியப்பில் ஆழ்த்துவதாகும். குடிலன், நடராசன் முதலானோர் இயல்புகளை அவரவர் வாய்ச் சொற்களின் வாயிலாகவே வெளிப்படுத்தியிருப்பது படிப்பவர்க்குப் பெருமகிழ்ச்சி தருவதாகும்.