பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

இலக்கியத் தூத்ர்கள்

கேட்டுப் பெருமகிழ்வுற்ற செய்தியை அரசனுக்கு அறிவித்தான். தக்க காரணத்துடன் அச்சேரனுக்குத் தூதனுப்புதல் வேண்டும் என்றும் விளம்பினான். “வஞ்சி நாட்டின் ஒருபகுதியாகிய நன்செய் நாடு நீர் வளமும் நிலவளமும் நிறைந்தது. அது நம் பாண்டி நாட்டைச் சேர்ந்த பகுதியாகும். அங்கு வாழ்வார் பேசும் மொழி நம் தமிழே. இஃது ஒன்றே அப்பகுதி நம்முடையது என்பதை நாட்டப் போதிய சான்றாகும். அந்நாட்டினைச் சில காலமாகச் சேரன் ஆண்டு வருகிறான். அதனை எவ்விதத்திலும் மீட்டல் வேண்டும் என்ற நினைவாலேயே யான் இந் நெல்லையில் கோட்டையும் படையும் கொண்டு நிறுவினேன். ஆதலின் அச்சேரன்பால் நாம் ஒரு தூதனை யனுப்பி, நன்செய் நாட்டின் உரிமையை விளக்குவோம்; அதனை நம்பால் ஒப்படைத்து விடுமாறு அறிவுறுத்துவோம் ; நம் வீரத்தையறிந்த சேரன் நம்பால் அதனை ஒப்புவித்து நம்முடன் நட்புக் கொண்டொழுக விரும்புவான். அப்போது நாமும் அதற்கு இசைந்து, நம் ஒற்றுமைக்கு அறிகுறியாக மனோன்மணியின் திருமணத்தைப் பற்றி மெல்ல உரைத்தால் அவன் அதற்கு மறுப்பின்றி விருப்புடன் ஒருப்படுவான். மணமும் நாம் நினைத்தவாறே இனிது நிறைவேறும்” என்று பக்குவமாகப் பகர்ந்தான்.

பலதேவன் தூது போதல்

குடிலன் கூறிய மொழிகளைக் கேட்ட சீவகன் சிந்தை பெரிதும் மகிழ்ந்தான். அவனைப் பெரிதும் பாராட்டி, இச் செயலை இனிது முடித்தற்கேற்ற பேராற்றல் படைத்தவன் நும் மகனாகிய பலதேவனே என்று பகர்ந்தான். அது கேட்டு அளவிறந்த மகிழ்ச்சி