பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீவகன் விடுத்த தூதன்

121

யடைந்த குடிலன், தன் மகனைத் தூதனுப்ப உடன் பட்டான். சீவகன் விடுத்த தூதனாய்ச் சேரன் பேரவை யடைந்த பலதேவன் அவன் முன் சென்று செருக்குடன் நின்றான். அவனது நிலை, சேரனுக்குச் சினத்தையும் வெறுப்பையும் விளைத்ததாயினும் அடக்கிக்கொண்டு, அவன் தூது வந்த காரணத்தை வினவினான்.

சேரன் பேரவையில் பலதேவன்

அப்பொழுது பலதேவன், “மலைய மன்னவ ! நெல்லையிலிருந்து பாண்டி நாட்டு எல்லையை ஆளும் சிவக வேந்தன் விடுத்த தூதன் யான். அவ்வழுதியின் மந்திரத் தலைவனாகிய குடிலேந்திரன் மகன் பலதேவன் என்பது என் பெயர். எம் மன்னனாகிய சீவகன், தன் பகைவரை யெல்லாம் வெல்லுதற்கே நெல்லையைத் தலைநகராக்கி ஆங்கு வல்லமை வாய்ந்த அரணையும் அமைத்துள்ளான் ; வேந்தே ! நீ ஆளும் வஞ்சி நாட்டின் தென்கீழ்த் திசையில் அமைந்த நன்செய் நாடு எங்கட்கு உரியது. அங்குள்ளார் பேசும் மொழியும், ஆளும் ஒழுக்கமுமே அதற்குத் தக்க சான்றுகள். முன்னிருந்த மன்னர் சோர்ந்திருந்த வேளையில் எங்கள் எல்லைக்குட் புகுந்து சின்னாள் நீ அந்நாட்டை ஆண்டாய். அந் நாட்டின் உரிமையை மீட்கும் நோக்குடனேயே நெல்லையை வல்லையில் தலை நகராக்கினோம். படைகளும் ஆங்குத் திரண்டு வந்துள்ளன” என்றான்.

சேரன் சினமும் சீவகன் மனமும்

பலதேவன் மொழிகளைக் கேட்ட சேரன் சிரித்தான், சினந்தான். ‘அதற்காக யாம் செய்ய

இ. தா.-9