பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. வள்ளுவர் கண்ட தூதர்

திருக்குறளில் தூதர் இயல்பு

‘எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை’யென்று சொல்லிப் போந்தார் நல்லிசைப் புலவருள் ஒருவராய மதுரைத் தமிழ் நாகனார். அத்தகைய சிறப்பு வாய்ந்த அருந்தமிழ்த் திருமறையாம் திருக்குறளில் தூதரின் இயல்புகள் வகுத்தோதப்படுகின்றன. குறளாசிரியராகிய திருவள்ளுவர் ஒரு பொருளின் இலக்கணத்தைத் திறம்பட ஆராய்ந்து வகுத்துரைப்பது போன்று உலகில் வேறெந்தப் புலவரும் கூறினாரல்லர். அத்தகு முறையில் தூதினுக்கும் இலக்கணம் வகுத்தோதும் திறம் கற்பவர் கருத்தைக் கவர்வதாகும்.

அமைச்சியலுள் தூதியல்

முப்பாலுள் நடுவண் அமைந்த பொருட்பால் திருவள்ளுவரின் பல துறைப் புலமை நலத்தைப் புலப்படுத்தும் கலைக் கருவூலமாகும். எழுபது அதிகாரங்களைக் கொண்ட அப்பகுதியில் முதல் இருபத்தைந்து அதிகாரங்களான் அரசியலை வகுத்துரைத்தார் அப்புலவர். அரசுக்கு அங்கமாக அமைந்த படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறனுள் அரசற்கு இணையாய தலைமை சான்ற அமைச்சனின் இயல்புகளை அடுத்துள்ள பத்து அதிகாரங்களான் விளக்கினார். அமைச்சியலை விரித்துரைக்கப் புகுந்த பெருநாவலர், அமைச்சராயினர் தூது போதலும் உண்டென்னும் கருத்தானும் தலையாய தூதன் அமைச்சனோடு ஒப்பாவானாக லானும் தூதரியல்பை யோதும் ‘தூது’ என்னும்

இ.தூ-2