பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளுவர் கண்ட தூதர்

11

துரைத்தார். வடநூலார் இவ்விருவகையாருடன் ஓலை கொடுத்து நிற்பானையும் கூட்டித் தூதரைத் தலையிடை கடையென்று வகுத்துரைத்தனர். தான் வகுத்துக் கூறுவான் தலையாய தூதன் கூறியது கூறுவான் இடையாய தூதன் ; ஓலை கொடுத்து நிற்பான் கடையாய தூதன் என்பர்.

‘தானறிந்து கூறும் தலைமற் றிடையது
கோனறைந்த தீதன்று கூறுமால்-தானறியா
தோலையே காட்டும் கடையென்(று) ஒருமூன்று
மேலையோர் தூதுரைத்த வாறு’

என்னும் பெருந்தேவனாரின் பழந்தமிழ்ப் பாரத வெண்பாப் பாடல் வடநூலார் கருத்திற்கு அரண் கோலுவதாகும். தான் வகுத்துக் கூறுவாயை தலையாய தூதன் அமைச்சனுக்கு ஒப்பானவன். கூறியது கூறுவாயை இடைத் தூதன் அவனினும் காற்கூறு குணம் குறைந்தோன். கடைத்தூதனே தற்கால அஞ்சல்துறைக் கடைநிலை யூழியற்கு ஒப்பானவன்.

தலையாய தூதன் நிலை

தலையாய தூதனுக்கு அமைய வேண்டிய அரிய பண்புகளையெல்லாம் ஈரடியொருபாவில் ஆராய்ந்துரைக்கும் தெய்வப்புலவரின் திறம் எண்ணியெண்ணி இன்புறுதற் குரியதாகும்.

‘கடனறிந்து காலம் கருதி இடனறிக்
தெண்ணி யுரைப்பான் தலை’

என்பது அவர் வாய்மொழி. வேற்று வேந்தர்பால் தான் செயலாற்றும் முறைமையைத் தெரிதல், அவர் செவ்வி பார்த்தல், சென்ற கருமத்தைச் செப்புதற் கேற்ற இடமறிதல், சொல்லும் வகையினை முன்னே