பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியத் தூதர்கள்

12

எண்ணியாய்தல் இவற்றையெல்லாம் நுண்ணிதின் நோக்கி யாய்ந்துரைக்கும் வாக்கு நலம் வாய்த்தவனே தலையாய தூதனாவான்.

திருவள்ளுவர் திறம்

வேற்றரசர்பால் தூது செல்வான், அவர் நிலையும், தன் அரசன் நிலையும், தன் நிலையும் தூக்கி, அவற்றிற்கேற்பக் காணும் முறைமையும், பேசும் முறைமையும் உடையனாதல் வேண்டும். அவ்வரசர் தன் சொல்லை ஏற்றுக்கொள்ளும் மனவியல்பைத் தெரிந்து பேசுதல் வேண்டும். தனக்குத் துணையாவார் உடனிருக்கும் இடனறிந்தும் இயம்புதல் வேண்டும். அவர்பால் தான் சொல்ல வந்ததனைச் சொல்லுந் திறமும், அதற்கு அவர் சொல்லும் மறு மொழியும், அதற்குப் பின் தான் சொல்லுவனவும் ஆயவற்றை மேன்மேல் தானே கற்பித்து வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வியல்புகளெல்லாம் ஒருங்கமையப் பெற்ற பெருங்கலைச் செல்வனே தலையாய தூதன் என்னும் உண்மையை இரண்டடிப் பாவில் எண்ணியமைத்துள்ள வள்ளுவரின் நுண்ணிய புலமைத்திறம் வியத்தற்குரியதன்றோ!

முதலிடைத் தூதர் பொதுவியல்

முதல் இருவகைத் தூதர்க்கும் பொதுவாக அமைய வேண்டிய இலக்கணங்களேயெல்லாம் இரு குறட்பாக்களால் வள்ளுவர் வகுக்கின்றார். தூது, பூணற்குரிய உயர்குடிப் பிறப்பு, தன் உறவினர் மாட்டு அன்புடைமை, வேந்தர் விழையும் பண்பு, தன் அரசன் மாட்டு அன்புடைமை, அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமை, அவற்றை வேற்றரசரிடை