பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளுவர் கண்ட தூதர்

13

விளம்புங்கால் ஆராய்ந்து கூறும் வன்மை ஆகிய ஆறு இயல்புகளும் தூதுரைப்பானுக்கு அமைய வேண்டியனவாகும். பின்னர்க் கூறிய மூவியல்பும் ‘இன்றி யமையாத மூன்று’ என்று குறிப்பார் திருவள்ளுவர்.

குலவிச்சை நலம்

அரசியலிற் பட்டறிவுடைய நன்மக்கட் குடியிற் பிறந்தோனாயின் முன்னோர் தூதியல் கேட்டறிந்த வகை இருப்பான். உறவினர்மாட்டு அன்புடையோனாயின் அன்னவர்க்குத் தீங்கு வாராமல் தான் பேணி யொழுகுவான் ; இன்றேல் தன்னைப் பேணியொழுகும் பெற்றியினனாவன். தூதராயினார் குடியிற் பிறந்தோனாயின் அது குலவிச்சையாய்க் கல்லாமற் பாகம் படுமன்றோ? ‘பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்’ என்பர் ஆன்றோர். வழிவழியாகப் பல மன்னரைச் சேர்ந்தொழுகிய திறத்தான் வேந்தவாம் பண்பும் இயல்பில் அமைவதொன்றாம்.

மன்னர் மதிக்கும் மாண்பு

தூதனாவான் அமைச்சர்க்குரிய நீதி நூல்களையெல்லாம் ஓதியுணர்ந்து நூலாருள் நூல் வல்லனாக ஒளிர்தல் வேண்டும். இயல்பாகவே நுண்ணறிவைப் பெற்றவனாகவும், கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவைக் கொண்டவனாகவும், பலரோடும் பல காலும் ஆராயப் பெற்ற கல்விநலஞ் சான்றவனாகவும் திகழ்தல் வேண்டும். இவற்றால் அயல்வேந்தர் நன்கு மதிக்கும் திறம் தூதனுக்கு அமைவதாகும். அதனால் அவன் சென்ற வினை இனிதின் முடியும் என்பார்,

“அறிவுரு ஆராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு”

என்று குறிப்பிட்டார் திருவள்ளுவர்.