பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

இலக்கியத் தூதர்கள்

வரலாற்றுச் சமய நூல்

இத்தகைய பெரியபுராணம் பழங்கதை பாடும் பான்மையவும், இல்லது புனைந்துரைக்கும் இயல்பினவுமாய பிற புராண நூல்களைப் போலன்றி உண்மை வரலாற்றை உறுசுவை கனியத் தக்க சான்றுகளுடன் திண்மையுறப் பேசும் பெற்றியுடையது. மேலும் இந்நூல் சைவ சமய உண்மைகளை இனிது விளக்கும் தெய்வக் காவியமாகவும் திகழ்வதாகும்.

வித்திட்ட வித்தகர்

இந்நூல் தோன்றுதற்கு முதன்முதல் வித்திட்ட வித்தகர் ஆலால சுந்தரர் என்னும் சமய குரவராவர். அவர் பாடியருளிய திருத்தொண்டத் தொகைப் பதிகமே பெரிய புராணம் எழுதற்கு அடிகோலியது. அவர் உலகில் தோன்றுதற்கு உற்றதொரு காரணத்தை உரைக்கப் புகுந்த சேக்கிழார்,

“மாத வம்செய்த தென் திசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வார் அவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்.”

என்று கட்டுரைத்தனர்.

ஆலால சுந்தரர் அவதாரம்

‘தென்றிசைத் திருநாடு பெருந்தவம் செய்த பெற்றியுடையது; அஃது இறையருள் நிறைந்து இனிது வாழ வேண்டும்; அதற்கு ஆங்குள்ள மக்களைத் திருவருள் நெறியிற் செலுத்தவல்ல ஞானச் செல்வர்கள் ஆண்டுத் தோன்றல் வேண்டும்; தங்கலம் எண்ணாது பிறர்நலமே பேணிப் பணி செய்து கிடப்பதே கடனாகப் பூண்ட திருத்தொண்டர்கள்