பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழர் விடுத்த தூதர்

19

வரலாற்றை அன்னார் அறிதல் வேண்டும்; அவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு வாழ்வினை அருள் பெருக்கும் திருநெறியிலும், அறம் பிறழாப் பெரு நெறியிலும் செலுத்த வேண்டும்; இதற்காகவே இறையருள் உந்த ஆலால சுந்தரர் உலகில் தோன்றியருளினார்’ என்பர் சேக்கிழார்.

காவியத் தலைவர் சுந்தரர்

சைவ சமய குரவருள் ஒருவராய ஆலால சுந்தரரே பெரியபுராணக் காவியத்தின் தலைவராவர். மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலமாகிய ஆதிசைவ மரபில் சடையனார்க்கும் இசைஞானியார்க்கும் அரும்பெறல் மகவாய்ச் சுந்தரர் அவதரித்தருளினர். நம்பியாரூரர் என்னும் பிள்ளைத்திருநாமத்துடன் அவர் பேரழகின் கொழுந்தாய் வளர்ந்து வந்தார்; கண்கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர்விரிப்ப, விண்கொள்ளாப் பேரொளிப் பெருவடிவினராய் விளங்கி வந்தார்.

அரசிளங்குமரர் சுந்தரர்

அவருடைய எழில் நலங்கண்ட திருமுனைப்பாடி நாட்டு மன்னனாய நரசிங்க முனையரையன், பெற்றவர் பால் வேண்டித் தன் மகனாகக் கொண்டு அரசிளங் குமரனாக வளர்த்து வந்தான். அதனால் நம்பியாரூரராய சுந்தரர் மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க வீறுசால் ஏறென விளங்கினர். இவரைத் திருவாரூர்த் தியாகேசர் ‘தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்’ என்று கூறியருளித் தமக்குத் தோழராக ஏற்றுக்கொண்டார். அதனால் சுந்தரரைச் சிவனடியார்கள் எல்லாம் ‘தம்பிரான் தோழர்’ என்றே தலைக்கொண்டு போற்றினர்.