பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

இலக்கியத் தூதர்கள்

பரவையார் சங்கிலியார் மணம்

இத்தகைய சிவபிரான் தோழராய சுந்தரர், திருவாரூர்ப் பெருமான் திருவருளால் அப்பதியில் தோன்றியருளிய பரவை நாச்சியாரைத் திருமணம் புரிந்து பெருமகிழ்வுடன் வாழ்ந்து வந்தார். இடையிடையே பல தலங்கட்கும் சென்று சிவபிரானைத் தரிசித்துச் செந்தமிழ்ப் பதிகம் பாடிவரும் பண்பினராய அவர் ஒருகால் திருவொற்றியூர் என்னும் சிவத்தலத்தையுற்றனர். ஆங்கு எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கும் தியாகேசன் என்பதே திருநாமம். திருவாரூர்த் தியாகன் திருவருளைப் பெரிதும்பெற்ற அருளாளராய சுந்தரர் ஒற்றியூர்த் தியாகனின் திருவருளையும் பெறுதற்குத் திருக்கோவிலுட் புகுந்தார். ஆங்குப் பூமண்டபத்தில் தங்கி இறைவனுக்குத் திருப்பள்ளித் தாமம் கொடுத்துக் கொண்டிருந்த சங்கிலியாரென்னும் மங்கை நல்லாரைக் கண்டு காதல் கொண்டார். அவரைத் திருவொற்றியூர்ப் பெருமானின் திருவருட் பெருந்துணை கொண்டு மணம் புரிந்து மகிழ்ந்தார்.

திருவாரூர்ப் பெருங்காதல்

ஒற்றியூரில் மற்றொரு மணம் பூண்ட சுந்தரர் பங்குனி யுத்தரத் திருநாள் நெருங்குவதை உணர்ந்தார். திருவாரூரில் பங்குனி யுத்தரத் திருநாள் பெருமுழக்கொடு நடக்கும். அவ்விழாவில் ஆரூர்த்தியாகேசன் அத்தாணி வீற்றிருக்கும் அழகு, கண்கொள்ளாக் காட்சியாகும். அந்நாளில் பெருமான் திருமுன்பு அவரின் காதல் மனைவியாராய பரவையாரின் ஆடலும் பாடலும் அணிபெற நிகழும். அவற்றையெல்லாம் பலகாற் கண்டு களித்த தொண்டராகிய சுந்தரருக்குத் திருவாரூர்க் காதல்