பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

இலக்கியத் தூதர்கள்

னது அயர்வு நீக்க, இவ்விரவே பரவையாற் சென்று அவளது ஊடல் ஒழித்தருளும்” என்று வேண்டினார்.

தோழர்க்குத் தூதராய்ப் போதல்

தோழரின் வேண்டுகோளை ஏற்றருளிய பெருமான் “நீ துன்பம் ஒழிவாய்; யாம் ஒரு தூதனாகி இப்பொழுதே பரவைபாற் போகின்றோம்” என்று அருள் புரிந்தார். அது கண்ட சுந்தரர் அளவிறந்த களிப்பினராய்ப் பெருமான் திருவடியில் விழுந்து வணங்கிப், ‘பரவையின் மாளிகைக்கு விரைவிற் செல்வீர்!’ என்று வேண்டினார். தொண்டனார் துயர் நீக்கத் தூதராய் எழுந்தருளிய ஆரூர்ப் பெருமான் பூதகண நாதர்களும் புங்கவரும் யோகியரும் புடை சூழப் புனிதமிகு வீதியினிற் புறப்பட்டார். அவ் வேளையில் திருவாரூரில் உள்ள ஒரு வீதியிலேயே சிவலோகம் முழுதும் காணுமாறு உளதாயிற்று.

ஆதிசைவர் திருக்கோலம்

பரவையார் திருமாளிகையைக் குறுகிய பெருமான் உடன் வந்தார் குழாமெல்லாம் புறத்தே நிறுத்தி, ஆரூரில் தம்மை அர்ச்சிக்கும் ஆதிசைவரின் கோலத்தில் மாளிகையின் வாயிலையடைந்தார். அவண் நின்று ‘பரவாய்! கதவம் திறவாய்’ என்று அவர் அழைத்த வளவில், துயிலின்றி அயர்ந்துழலும் பரவையார், நம்பெருமானுக்குப் பூசனை புரியும் புரிநூல் மணி மார்பர் குரல்போலும் என்று துணிந்தார்; இவர் நள்ளிருளில் இவண் நண்ணியதன் காரணம் என்னையோ ? என்று எண்ணிப் பதை பதைத்து வாயில் திறந்தார். அவரை வணங்கி “முழுதும் உறங்கும் பொழுதில் என்னை ஆளும்