பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

இலக்கியத் தூதர்கள்

வீரமும் புகழும்

இத்தகைய பெருமை சான்ற அதியர் மரபிலே பிறந்த அஞ்சி எவர்க்கும் அஞ்சாத ஆண்மையுடையான்.

“பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானை
சினமிகு முன்பின் வாமான் அஞ்சி”

என்று அதியமான் படைவலத்தைப் பாராட்டிப் பேசினார் ஆசிரியர் மாமூலனார். இவனுக்கு எழினி என்ற மற்றொரு பெயரும் வழங்கும். இக்கோமானைப்பாடிய கொழி தமிழ்ப் புலவர் பலராயினும் பாரியைப் பாடிய கபிலரைப் போலவும் ஆயைப் பாடிய மோசியைப் போலவும் இவன் புகழொளி எங்கும் பெருகுமாறு விரிவாகப் பாடியவர் ஒளவையார் ஒருவரே.

ஒளவையார் அமைச்சராதல்

அதியமான் நெடுமான் அஞ்சியின் படைவலத்தையும் கொடை நலத்தையும் பலர் வாயிலாகக் கேட்டுவந்த தமிழ் மூதாட்டியாராய ஒளவையார் அவன் வாழும் தகடூரை நாடிச் சென்றார். அவனைக் கண்டு தண்டமிழ்ப் பாக்களால் அவன் புகழைப் பாடினார். ஒளவையாரின் செவ்விய புலமையையும் செய்யுள் நலனையும் கண்டு அதியமான் கழிபேருவகை கொண்டான். அவரைத் தன் அரசவைப் புலவராகவும் அமைச்சருள் ஒருவராகவும் ஏற்றுப் போற்றி மகிழ்ந்தான்.

அதியமான் ஒளவையார் நட்பு

அதியமான் தன் படைவலியால் பன்னாட்டுமன்னரையும் வென்று பகைவரைப் பெருக்கி வைத்திருந்த காரணத்தால் ஒளவையாரின் அறிவுரை அவனுக்கு மிகவும் இன்றியமையாததாக இருந்தது. அதனை