பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

இலக்கியத் தூதர்கள்

புகழ்ந்து பாடினார். அவர்கள் அன்புடன் வழங்கிய கொடைப் பொருளைப் பெற்றுத் தம் வாழ்வைத் தடையிலாது நடத்தி வந்தார்.

அமுத நெல்லிக் கனி

இத்தகைய பரிசில் வாழ்க்கையையுடைய பைந்தமிழ் மூதாட்டியாரை அதியமான் தனக்கு அறிவுரை வழங்கும் அமைச்சராகப் பெற்றான். அவனுக்கு ஒரு நாள் அருமையானதொரு கெல்லிக்கனி கிடைத்தது. அஃது அவன் நாட்டு மலையொன்றன் உச்சியில் மக்கள் ஏறுதற்கொண்ணாத உயரத்தில் அமைந்த பிளவில் முளைத்த நெல்லி மரத்தினின்று அரிதாகக் கிடைத்தது. அக்கனி பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை பழுப்பதாய சிறப்புடையது. அதனை உண்டவர் நெடுநாள் உடலுரத்துடன் ஊறின்றி வாழ்வர்.

ஒளவையாருக்குக் கனியை அளித்தல்

அத்தகைய அருங்கனியைப் பெற்ற அதியமான் தன் அரசவையில் வீற்றிருந்த அருந்தமிழ் மூதாட்டியாரை நோக்கினான். இதனை இப்பெருமாட்டியார் உண்டு பல்லாண்டு வாழ்வாராயின் எத்தனை எத்தனை உண்மைகளை மக்கள் உய்யுமாறு உதவுவார்! இதனை நாம் உண்டு நெடுநாள் வாழ்ந்தோமாயின் அடுபடைகொண்டு அளவற்ற உயிர்களைக் கொன்று குவிப்போம். ஆதலின் இதனை ஒளவையாரே அருந்த வேண்டுமெனத் துணிந்தான். உடனே அதனை ஒளவையார் கரத்திற் கொடுத்து உண்ணுமாறு வேண்டினான்.