பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதியமான் அனுப்பிய தூதர்

37

ரைப் போல் சென்று கண்டு நல்லுரை சொல்லி வருவார். அதியமான் படைவலியை எடுத்துரைத்துப் பகைவரை அச்சுறுத்தி வருவார். அம்முறையில் ஒளவையார் அதியமான் பகைவர்க்குக் கூறிய அறிவுரைகள் பலவாகும்.

அதியமான் பகைவர்க்கு அறிவுரை

அதியமான் தன்பால் வரும் இரவலர்க்கு எண்ணற்ற தேர்களைப் பரிசாக ஈந்து மகிழ்வான். புலவர்கள் அவன் தேர்ப்படைக்கு உவமையாக மாறாது பெய்யும் மழைத்துளிகளைக் குறிப்பர். அங்ஙனமாயின் அவன் தேர்ப்படையின் அளவை என்னால் இயம்பலாகுமோ? அவன் நாட்டுத் தச்சர் ஒவ்வொருவரும் நாளொன்றிற்கு எட்டுத் தேர்களைக் கட்டுற அமைக்கும் தொழில் திறமுடையார். கோடுகளில் செறித்த இருப்புத் தொடிகள் பிளக்குமாறு பகைவர்தம் கோட்டை வாயிற் கதவைக் குத்திச் சிதைக்கும் குன்றனைய யானைப் படையை மிகுதியாகக் கொண்டவன். போர்க்களத்திற் கூடித்தாக்கும் கொடும்படை வீரர்களின் மார்பு குலைந்து பிளந்து சிதையுமாறு மிதித்தோடும் குதிரைப்படையினைப் பெரிதும்பெற்றவன். பகைவரை வெட்டி வெட்டிக் கூர்மை மழுங்கிய வாளையும், குத்திக்குத்திக் கோடும் நுதியுஞ் சிதைந்து செப்பனிடங் பெற்ற வேலையும் தாங்கிய வீரர்கள் அவன்பாற் கடல்போற் பரந்து காணப்படுவர். அவ்வீரர்கள் அடிக்குங் கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் அரவினையொத்த ஆற்றல் படைத்தவர். இத்தகு பெரும் படையினைப் பணிகொள்ளும் பேராற்றல் படைத்தவன் அதியமான். ஆதலால் பகைவர்களே ! அதியமான் இளையன், எளியன் என்று இகழன்மின்!