பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

இலக்கியத் தூதர்கள்

மாதவி மனையிற் கோவலன்

அவளும் நகர நம்பியர் பலரும் உலவும் நாற்சந்தியில் வந்து நின்றாள். அவ்வழியே வந்த கோவலன் அம்மாலையின் விலை, மாதவியின் பரிசமெனத் தெரிந்தான். பணிப்பெண் பகர்ந்தவாறே ஆயிரத்தெண் கழஞ்சுப் பொன்னையும் கொடுத்து மாதவியின் மனையகம் அடுத்தான். அவளது கலையினும் அழகிய காதல் மயக்கினும் மூழ்கினான். அவன் தனது மனையகத்தை அறவே மறந்தான்.

இந்திர விழா

காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இந்திர விழா மிகச் சிறப்பாக நடைபெறும் சித்திரைத் திங்கள் நிறைமதி நாளில் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் அப்பெருவிழா நிகழும். விழாவின் முடிவில் முழு நிலா நாளில் நகரமாந்தர் எல்லோரும் கடலாடுதற்குக் களிப்புடன் செல்வர். கோவலன் மாதவியுடன் கூடி வாழும் நாளில் இந்திரவிழா வந்துற்றது.

விழாவில் மாதவி கூத்து

அவ்விழாவில் மாதவி அரங்கேறித் திறம்பட ஆடினாள். திருமாற்குரிய தேவபாணிமுதல், திங்களைப் பாடும் தேவபாணியீறாகப் பலவகைத் தேவபாணிகளைப் பாடினாள். பாரதி, கொடுகொட்டி, பாண்டரங்கம் போன்ற பதினொரு வகைக் கூத்தும் ஆடி மக்களை மகிழ்வித்தாள். அவளுடைய ஆடலும் பாடலும் அழகும் மக்கள் மனத்தை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தின. அது கண்டு கோவலன் ஊடற்கோலம் கொண்டான். இங்கேதான் அவன் மாதவியைப் பிரிதற்குக் காரணமான மனப்பிளவு தோன்றுகிறது.