பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாதவி யனுப்பிய தூதர்

49

கடற்கரையில் காதலர்

இந்திர விழாவின் இறுதிநாள் வந்தடைந்தது. மாதவியின் ஆடலும் கோலமும் ஒருவாறு முடிந்தன. அவற்றைக் கண்டு வெறுப்போடிருந்த கோவலன் விரும்பி மகிழுமாறு, அவள் தன் கோலத்தை மாற்றிப் புதிய வகையில் தன்னைக் குறைவறப் புனைந்து கொண்டாள். கோவலனோடு இருந்து அவனை மகிழ்வித்தாள். விழாவின் முடிவில் நகர மக்கள் கடலாடச் சென்றனர். மாதவி கடல் விளையாட்டைக் காண விரும்பினாள். கோவலனும் மாதவியும் கடற்கரைப் பொழிலை நோக்கிப் புறப்பட்டனர். கோவலன் கோவேறு கழுதைமீது ஏறிச் சென்றான். மாதவி நன்றாக அலங்கரித்த வண்டியொன்றில் ஏறிச் சென்றான். இருவரும் கடற்கரை யடைந்து, ஆங்குப் புன்னைமர நீழலிற் புதுமணற் பரப்பின்மேல் அமைத்த இருக்கையில் தங்கினர். ஓவியத்திரைகளைச் சூழவிட்டு, மேலே விதானமும் கட்டியமைத்த சிறந்த இருக்கையாக அது திகழ்ந்தது. அதனுள்ளே யானை மருப்பால் அமைந்த வெண்கால்களையுடைய கட்டிலில் மாதவியும் கோவலனும் இருந்தனர்.

யாழைத் திருத்தி யளித்தல்

அவ்வேளையில் தோழியாகிய வசந்தமாலை கையில் மகர யாழை வைத்துக் கொண்டு நிற்பதை மாதவி கண்டாள். அதனைத் தொழுது வாங்கிய மாதவி அதன் நரம்புகளைக் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் தடவி இசையெழுப்பிப் பார்த்தாள். இசை நூலில் வகுத்துள்ள இலக்கண வகையில் யாழ் பொருந்தத் திருந்த அமைந்திருப்பதைக் கண்டாள். கோவலன் கையில் அந்த யாழைக் கொடுத்தாள்.