பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

இலக்கியத் தூதர்கள்

காதற் குறிப்புடன் கனியிசை

அவ்யாழைக் கையில் வாங்கிய கோவலன் காவிரியைப் பற்றிய ஆற்றுவரிப் பாடல்களும் கானல்வரிப் பாடல்களும் பாடி, மாதவின் மனம் மகிழுமாறு யாழிசைக்கலானான். அவன் இசைத்த பாடல்கள், காதலன் ஒருவன் தன் காதலியை நோக்கிக் கூறும் காதற் கருத்துக்கள் நிறைந்தனவாக இருந்தன. அவற்றைக் கேட்ட மாதவி, அவன் நிலை மாறியிருப்பதாக நினைந்தாள்; வேறு மாதிடத்தே காதல் கொண்டிருப்பதாகக் கருதினாள்; அதனால் மகிழ்ந்தவள் போல் நடித்து மனத்தகத்தில் ஊடல் கொண்டாள். அவன் கையிலிருந்த யாழைத் தன் கையில் வாங்கி இசைக்கத் தொடங்கினாள். கோவலன் பாடியது போலவே, தானும் காதற்குறிப்புக் கொண்டவளைப் போலக் காதற் கருத்துக்கள் நிறைந்த பாடல்களைக் கனிந்த இசையொடு குழைத்துப் பாடினாள். அவள் நிலமகள் வியக்குமாறும் உலகமக்கள் உவக்குமாறும் யாழிசையோடு பொருந்த இனிமையாகப் பாடினாள்.

ஊழ்வினையால் உற்ற பிரிவு

மாதவி பாடிய பாடல்கள், காதலியொருத்தி காதலன்பிரிவுக்கு ஆற்றாமல் வருந்தியுரைக்கும் காதற் கருத்துக்கள் அமைந்தனவாக இருந்தன. அவற்றைக் கேட்ட கோவலன், ‘இவள் வேறோர் ஆண்மகனிடத்துக் காதல் விருப்பங் கொண்டு இவ்வாறு பாடினாள் ; மாயப் பொய் பல கூட்டும் மாயத்தா ளாதலின் இவ்வாறு பாடினாள்’ என்றெண்ணி மனம் மாறினான். அதனையே காரணமாகக் கொண்டு, ஊழ்வினை வந்து உருத்தமையால் உடனே மாதவியை விட்டுப் பிரிந்தான். ஏவலாளர் சூழ்ந்துவரக் கோவலன் அங்கு