பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாதவி யனுப்பிய தூதர்

53

“மாலை வாரார் ஆயினும் மாணிழை
காலேகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தானென்.”

மாதவி பெருந்துயர்

மறுநாட் பொழுதுபுலர்வதற்கு முன்னே கோவலன் கண்ணகியோடு புறப்பட்டுப் பெற்றோர்க்கும் தெரியாமல் நகரைவிட்டுப் பெயர்ந்தான். அவனைத் தேடி ஏவலாளர் பலர் பல திசைகளிலும் விரைந்தேகினர். இச்செய்தியை அறிந்த வசந்தமாலை ஓடோடியும் வந்து மாதவியிடம் அதனை ஓதினாள். அதைக் கேட்டதும் மாதவி பெருந்துயருற்று வருந்தினாள். அவளுடைய பெரு மாளிகையின் ஒருபால் படுக்கையில் விழுந்து கிடந்து வெதும்பினாள். அவள் அடைந்த துயரைப் பற்றிக் கேள்வியுற்ற கோசிகன் என்னும் அந்தணாளன் மிகவும் வருந்தி ஆறுதல் கூறச் சென்றிருந்தான்.

கோசிகன் தூது

அக் கோசிகனைக் கண்ட மாசிலா மாதவி துயரக் கோலத்தோடு அவனைத் தொழுது வேண்டினாள். ‘என் ஆற்றொணாத் துயரை நீரே ஆற்றுதல் வேண்டும்; நான் எழுதித் தரும் கடிதத்தை என் கண்மணியனையாரை எங்கேனும் தேடிக் கண்டு அவரிடம் சேர்க்க வேண்டும்’ என்று வேண்டினாள்.

மாதவியின் கடிதம்

‘அடிகளின் திருவடிகளுக்கு வணக்கம். பொய்ம்மை நீங்கிய மெய்யறிவுடைய பெரியோய்! என் திருந்தாச் சொற்களைத் தங்கள் திருவுளத்திற் கொள்ளவேண்டும். பெற்றோரின் கட்டளையில்லாம